மெட்டா நிறுவனத்தின் சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் பல பயனர்கள் தங்களை பின்தொடர்ந்து வந்த ஃபாலோயர்களின் (Followers) திடீரென மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளதாக புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த திடீர் ஃபோலோயர்களின் எண்ணிக்கை சரிவுக்கான காரணம் குறித்து மெட்டா நிறுவனம் அந்த அதிகாரப்பூர்வ விளக்கத்தையும் தற்போது வரை வெளியிடவில்லை.
இந்த ஃபோலோயர் சரிவு பேஸ்புக்கின் பயனர்களை மட்டுமல்லாது அதன் நிறுவனரையும் தாக்கியுள்ளது. மெட்டா நிறுவனரும் அதன் தலைமை நிர்வாக அதிகாரியுமான மார்க் ஜுக்கர்பெர்க் தன்னை பின் தொடர்ந்து வந்த 119 மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்களை இழந்துள்ளார். தற்போது அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்திற்கும் கீழே சரிந்துள்ளது.
வங்காள தேச எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரினும் கிட்டத்தட்ட 9 லட்சம் பாலோயர்களை இழந்துள்ளார். இருப்பினும் மாயமான தனது பாலோயர்கள் குறித்து அவர் வேடிக்கையாக வெளியிட்டுள்ள பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. “முகநூல் சுனாமியை உருவாக்கியது. அது என்னைப் பின்தொடர்பவர்களில் கிட்டத்தட்ட 900,000 பேரைத் துடைத்துவிட்டு, 9000 பேரை மட்டும் கரையில் விட்டுச் சென்றது. நான் ஃபேஸ்புக்கின் நகைச்சுவையை விரும்புகிறேன்” என்று அந்த பதிவில் தஸ்லீமா குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக மெட்டா நிறுவன செய்தி தொடர்பாளர் ஒருவரை அணுகி விசாரிக்கும்போது, “சிலர் தங்கள் பேஸ்புக் கணக்கில் சீரற்ற பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை இருக்கும் விவகாரம் தொடர்பாக நாங்கள் அறிவோம். முடிந்தவரை விரைவாக இவ்விவகாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர நாங்கள் பணியாற்றி வருகிறோம். தங்கள் சிரமத்திற்கு வருந்துகிறோம்” என்று தெரிவித்தார்.