இணைய பாதுகாப்பு நிறுவனமான கிரவுட்ஸ்டிரைக்கில் ஏற்பட்ட ஒரு பாதிப்பு காரணமாக உலகம் முழுக்க மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் சிக்கலில் உள்ளன. உலகின் பெரும்பாலான வங்கிகள், செய்தி நிறுவனங்கள், ஐடி துறை என அனைத்தும் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் 911, லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் உள்ளிட்ட பல முக்கிய தளங்கள் முடங்கியிருக்கின்றன.
ஆஸ்திரேலியா, ரஷ்யா, நெதர்லேண்டு போன்ற நாடுகளின் விமான சேவையும் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஹாங்காங்கில் கைகளால் எழுதப்பட்ட டிக்கெட்டுகளை பயணம் செய்பவர்களுக்கு கொடுத்து வருகிறார்கள். இந்தியாவில் விமான சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. பல்வேறு நாடுகளின் சூப்பர்மார்க்கெட் போன்ற அத்தியாவசிய இடங்களில் பணம் செலுத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டியிருக்கிறது.
உலகமே இப்போது ஸ்மார்ட்ஃபோனுக்குள் வந்துவிட்டாலும், இன்னமும் வர்த்தம், போக்குவரத்து, ஐடி, செய்திகள் என பலவற்றுக்கு கணிணிகளையே நாம் பயன்படுத்திவருகிறோம். அதில் பெரும்பாலும் விண்டோஸ்தான் இயங்குதளமாக இருக்கும். இன்று உலகின் பல்வேறு இடங்களில் விண்டோஸ் பயன்படுத்தும் பலருக்கும் BSOD வந்திருக்கிறது. அதாவது BLUE SCREEN OF DEATH. கணிணியில் எதையுமே நம்மால் இயக்க முடியாது. இப்படியான ப்ளூ ஸ்கிரீன் மட்டும் டிஸ்பிளே ஆவதைத்தான் அப்படி சொல்கிறார்கள்.
சைபர் செக்யூரிட்டி ஃபிளாட்ஃபார்மான ஃபேல்கன் தான் விண்டோஸ் மென்பொருளின் பாதுகாப்பினை உறுதி செய்துவருகிறது. அதில் ஏற்பட்ட சிக்கல் தான் இது எல்லாவற்றுக்கும் காரணம் என சொல்லப்படுகிறது.
தற்போது ஏற்பட்டிருக்கும் சிக்கலை CrowdStrike பொறியாளர்கள் கண்டறிந்துவிட்டதாகவும், அதனை சரி செய்ய முயன்றுவருவதாகவும் Crowdstrike தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், இது இன்னும் எவ்வளவு நேரம் நீடிக்கும் என தெரியவில்லை. சில மணி நேரமே என்றாலும், உலக அளவில் இது மிகப்பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்தும்.