தமிழகத்தில் மேலும் 246 தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும்- அமைச்சர் உதயகுமார்
தமிழகத்தில் இந்தாண்டு மேலும் 246 தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
சென்னையில் இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின் மாநில அளவிலான கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து காணொளி காட்சி வழியே சிறப்பு விருந்தினராக வருவாய் மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்றார். அப்போது தகவல் தொழில் நுட்பத்துறையில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், தமிழகத்தில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்தும் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசும்போது... "தமிழகத்தில் கொரோனா காலக்கட்டத்திலும் தகவல் தொழில்நுட்பத் துறை தடையில்லாமல் செயல்பட்டது. தமிழகத்தில் உள்ள 18 ஐ.டி நிறுவனங்கள் வழியே 4 லட்சம் பட்டதாரிகளுக்கு தகவல் தொழில்நுட்பத் துறையில் நேரடி வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 90 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. தமிழகத்தில் வரும் ஆண்டில் மேலும் 246 தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளது" எனக் கூறினார்.