சந்திரயான்-2 திட்டத்தின் கடைசி நேரத்தில் லேண்டர் விக்ரமின் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் விஞ்ஞானிகளின் முயற்சிக்கு தலைவர்கள் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர்.
கடைசி நிமிடத்தில் விக்ரம் லேண்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், விஞ்ஞானிகள் நம்பிக்கையை இழக்கக்கூடாது என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். சந்திரயான்-2 திட்டத்தில் விஞ்ஞானிகளின் அபாரமான பணிகளைப் பாராட்டுவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார். ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், இஸ்ரோ விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பு உணர்வு, பேரார்வம் ஒவ்வொரு இந்தியருக்கும் தூண்டுதலாக அமைவதாக தெரிவித்துள்ளார். விஞ்ஞானிகளின் அரிய பணிகள் வீணாகாது என்று கூறியுள்ள அவர், எதிர்வரும் இந்திய விண்வெளித் திட்டங்களுக்கு அடித்தளமாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.
சந்திரயான்-2 திட்டத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோவின் ஒட்டுமொத்த குழுவும் அர்ப்பணிப்பு உணர்வுடனும், துணிவுடனும் செயல்பட்டதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், இஸ்ரோவின் பணியால் நாடே பெருமை கொள்வதாகவும், சிறந்த எதிர்காலத்துக்காக நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நாடும் நாட்டு மக்களும் இஸ்ரோ விஞ்ஞானிகள் பக்கம் நிற்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், சந்திரயான்-2 திட்டத்தில் இஸ்ரோ இதுவரை அடைந்துள்ள சாதனைகளால் ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்படுவதாக தெரிவித்துள்ளார்.