ஒரே நேரத்தில் 103 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது வெறும் உலக சாதனை முயற்சி அல்ல எனவும், இஸ்ரோவின் செயல்திறனை அதிகரிக்கும் முயற்சி எனவும் அந்த அமைப்பின் தலைவர் கிரண்குமார் தெரிவித்துள்ளார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ 103 செயற்கைகோள்களை ஒரே ராக்கெட்டில் செலுத்தி விண்ணில் நிலை நிறுத்துவதற்கான பணியை மேற்கொண்டு வருகிறது. பிப்ரவரி முதல் வாரத்தில் ஒரே ராக்கெட்டில் 103 நானோ செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி சாதனை செய்ய இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து இஸ்ரோ தலைவர் கிரண் குமார் கூறுகையில், ‘பிஎஸ்எல்வி- சி 37 ராக்கெட் மூலம் 103 செயற்கைகோள்களை செலுத்தும் இந்த முயற்சி வெறும் உலக சாதனைக்கான முயற்சி அல்ல. இது இஸ்ரோவின் நீண்ட நாள் இலக்கு. எங்கள் செயல்திறனை அதிகரித்து கொள்ள நாங்கள் செய்யும் முயற்சி. இதில் 20 க்கும் மேற்பட்டவை வெளிநாட்டு செயற்கைக்கோள்களாகும். வானிலையை துல்லியமாக கணிக்கும் Cartosat–2D செயற்கைக்கோளும் இதனுடன் அனுப்பப்படுகிறது. இதனை தொடர்ந்து, ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட், பிஎஸ்எல்வி-சி 38 ராக்கெட்டுகளையும் விண்ணில் செலுத்த நாங்கள் தயாராகி வருகிறோம்’ என தெரிவித்துள்ளார்.