’’காரும் நான்தான்... விமானமும் நான்தான்’’ - விரைவில் மாஸ்காட்ட வருகிறது பறக்கும் கார்!

’’காரும் நான்தான்... விமானமும் நான்தான்’’ - விரைவில் மாஸ்காட்ட வருகிறது பறக்கும் கார்!
’’காரும் நான்தான்... விமானமும் நான்தான்’’ - விரைவில் மாஸ்காட்ட வருகிறது பறக்கும் கார்!
Published on

சாலையில் மாஸான ஒரு காரில் சென்றுகொண்டிருக்கும் போதே அதற்கு ரெக்கை முளைத்து திடீரென அது ஒரு விமானமாக மாறி நாடு விட்டு நாடு பறந்துசெல்கிறது. கேட்பதற்கே எப்படியிருக்கிறது? இது எல்லாம் கனவிலும், சினிமாவிலும்தான் நடக்கும் என்று தோன்றுகிறதல்லவா? ஆம், சினிமாக்களில் மட்டுமே நாம் பார்த்து வியந்துவந்த ஒரு செயலை நிஜமாக்கி இருக்கிறது ஸ்லோவேக்கியன் கம்பெனியான க்ளீன் விஷன்(Klein Vision).

2017ஆம் ஆண்டிலிருந்து பறக்கும் காரை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த க்ளீன் விஷன் தற்போது விமான காரை உருவாக்கி சாதித்து காட்டியிருக்கிறது. க்ளீன் விஷனின் இந்த ஏர்கார் விமானத் தகுதிக்கான சான்றிதழையும் பெற்றுள்ளது. இதுகுறித்து க்ளீன் விஷனின் கண்டுபிடிப்பாளரும் நிறுவனருமான பேராசிரியர் ஸ்டீபன் க்ளீன் கூறுகையில், ’’ஏர்கார் சான்றிதழானது பறக்கு கார்கள் உற்பத்தியை அதிகரிப்பதை ஊக்குவிக்கிறது. இடைதூர பயணத்தை மாற்ற எங்களுக்கு அதிகாரப்பூர்வமான சான்றிதழைக் கொடுத்து உறுதிப்படுத்தியுள்ளது’’ என்கிறார்.

ஐரோப்பிய விமானப் பாதுகாப்பு ஏஜென்சி (EASA) தரநிலையின் அடிப்படையில் இந்த கார் 70 மணிநேர கடுமையான விமானப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இருநூறுக்கும் மேற்பட்ட டேக்ஆஃப்கள் மற்றும் தரையிறக்க சோதனைக்கு இந்த கார் உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஏர்காரில் முழு அளவிலான விமானம் மற்றும் செயல்திறன் தொழில்நுட்பங்களும் அடக்கம். இந்த நிறுவனமானது லண்டனிலிருந்து பாரிஸுக்கு இந்த காரை பறக்கவிட திட்டமிட்டிருக்கிறது.

பிரிட்டனுக்குள் பறக்க அனுமதி பெறப்பட்டிருந்தாலும் இந்த ஏர்காரை மற்றநாடுகளில் பறக்கவிட அனுமதி பெறவேண்டியுள்ளதாக தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம். சாலையில் சென்றுகொண்டிருக்கும்போதே இந்த காரை ஒரு பட்டனை அழுத்துவதன்மூலம் மூன்றே நிமிடத்தில் விமானமாக மாற்றமுடியும். இது 140PS BMW 1.6 லிட்டர் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் ஒருமுறை சார்ஜ் செய்தால் 1,000 கிமீ வரை செல்ல முடியும்.

இதுதவிர, க்ளீன் விஷன் மணிக்கு 300 கிமீ வேகத்தில் 1,000 கிமீ வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிற எடைகுறைந்த மற்றும் திறமையான ADEPT என்ஜினை இந்த காரில் பொருத்தும் வேலையையும் செய்துவருகிறது. தற்போது 1,100 கிலோ எடையுள்ள இரண்டு இருக்கைகள் கொண்ட இந்த ஏர்காரானது அதிகபட்சமாக 190 கிமீ வேகத்தில் 8,200 அடி வரை பறந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com