கூகுள் மற்றும் ஜியோ நிறுவனம் இணைந்து புதிதாக ஸ்மார்ட் போனை உருவாக்கி உள்ளது. இந்த அறிவிப்பை, ஜியோ ஃபோன் நெக்ஸ்ட் சார்பில், ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். இன்று, ரிலையன்ஸ் குழுமத்தின் 44-வது பொதுக்குழு கூட்டத்தில் முகேஷ் அம்பானி உரையாற்றி வருகிறாரென்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடத்தில், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் கூகுள் நிறுவனங்கள் இந்த புது போன் உருவாக்கப்படும் என தெரிவித்தது. தற்போது, அந்நிறுவனங்களை சேர்ந்த முகேஷ் அம்பானி மற்றும் சுந்தர் பிச்சை இருவரும் இணைந்து, தற்போது இந்த போன் உருவாக்கப்பட்டுவிட்டதென, அறிவித்துள்ளனர்.
இந்த புதிய ஸ்மார்ட் போன், கூகுள் மற்றும் ஜியோவின் பிரத்யேக செயலிகளை பயன்படுத்தும் வகையில் இருக்கும். விலை மலிவான இந்த புதிய ஸ்மார்ட் போன் செப்டம்பர் 10 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி முதல் விற்பனை செய்யப்படும். 5ஜி தொழில்நுட்ப சாதனங்களை உருவாக்குவதிலும் ஜியோ நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இதுபற்றி பேசியிருக்கும் முகேஷ் அம்பானி, “இந்தியாவில் 30 கோடி மொபைல் பயனாளர்கள் இருக்கிறார்கள். இருப்பினும் அவர்களில் பெரும்பாலனவர்கள், 2ஜி சேவையுடனோயே இருக்கிறார்கள். காரணம், அடிப்படை வசதிகள் கொண்ட 4ஜி சேவைகள் வாங்க போதிய பொருளாதாரம் அவர்களுக்கு இல்லை.
அந்த நிலையை மாற்ற, அனைவருக்கும் உகந்த ஒரு ஸ்மார்ட் போனை தயாரிக்க நினைத்து, இதை வடிவமைத்திருக்கிறோம். இந்திய மொபைல் சந்தைக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்படும். இந்திய சந்தையில் வெற்றியடைந்த பின், இது உலக சந்தைக்கும் கொண்டு செல்லப்படும்” எனக்கூறியுள்ளார்.
ரெட்மி, சாம்சங், ரியல்மீ போன்ற மொபைல் கம்பெனிகளுக்கு, இது போட்டியாக களமிறக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், இதன் விலை நிலவரம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.