இந்தியாவின் முன்னணி செல்போன் சேவை வழங்கும் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் நாட்டின் சில பகுதிகளில் திடீரென முடங்கியதால் வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜியோ 4ஜி நெட்வொர்க் சேவைகளை வழங்கி வருகிறது. அன்லிமிடெட் கால், அளவில்லா இன்டர்நெட் வசதியுடன் அறிமுகப்படுத்தப்பட்ட ஜியோ அபார வளர்ச்சியை சந்தித்த நிலையில், அந்நிறுவனம் 42 கோடிக்கு மேல் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. எனினும் ஜியோ நிறுவனம் அவ்வப்போது தொழில்நுட்பக் கோளாறுகளை அடிக்கடி எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக அடிக்கடி அந்த நிறுவனத்தின் நெட்வொர்க் முடங்குவது வாடிக்கையாக உள்ளது. நேற்று அது மீண்டும் நடந்துள்ளது.
நாட்டின் சில பகுதிகளில் நேற்றிரவு (வியாழக்கிழமை) 8:06 மணி முதல் ஜியோ நெட்வொர்க் செயலிழந்துள்ளதாக வாடிக்கையாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. ஜியோ நெட்வொர்க் முடங்கியது குறித்து ட்விட்டர், டவுன் டிடெக்டரில் பல பயனர்கள் புகார் கூறி வருகின்றனர். நெட்வொர்க் காண்பித்தபோதிலும் யாருக்கும் கால் செய்யவோ, பெறவோ முடியவில்லை என்று பெரும்பாலான பயனர்கள் கூறுகிறார்கள். இது குறித்து ஜியோ நிறுவனம் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
டவுன் டிடெக்டர் இணையதளம் வெளியிட்ட தகவலின்படி, நேற்றிரவு இரவு 8:06 மணி முதல் ஜியோ நெட்வொர்க் செயலிழந்துள்ளது. 66 சதவீத பயனர்கள் ஜியோ சிக்னலைப் பெற முடியவில்லை எனக் கூறியுள்ளனர். நெட்வொர்க் சிக்கல் மொபைல் பயனர்களுக்கு மட்டுமே ஏற்பட்டது. நிறுவனத்தின் பிராட்பேண்ட் சேவை பாதிக்கப்படாமல் இருந்தது'' எனத் தெரிவித்துள்ளது.