ஜப்பான் நாட்டில் ‘கொரில்லா மழையை’ முன்கூட்டியே கணிக்க புதிய ரேடாரை அந்நாடு தயாரித்து வருகிறது.
ஜப்பான் நாடு இயற்கை பேரிடர்களை அதிகம் சந்திக்கும் நாடு. ஜப்பான் நாட்டில் பூகம்பம், மழை வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களால் அதிக மக்கள் உயிரிழக்கின்றனர். அதனால் அந்த நாடு பல இயற்கை பேரிடர்களை அறிய புதிய தொழிநுட்பங்களை உருவாக்கி வருகிறது. அதைபோல் விரைவில் உருவாக்கப்படவுள்ள ஒன்றுதான் கொரில்லா மழையை முன்கூட்டியே கண்டறியும் ரேடார் கருவி.
ஜப்பானில் முதல் முறையாக கடந்த 2008ஆம் ஆண்டு கொரில்லா மழை என்ற ஒரு புதிய வார்த்தை பிரபலமானது. அதாவது மிகக் குறுகிய கால அளவில் அதிக மழை பதிவாவுதையே இந்த ‘கொரில்லா மழை’குறிக்கிறது. ‘கொரில்லா மழை’யில் ஒரு மணி நேரத்தில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகும். இதனால் மழை வெள்ள பாதிப்பு அதிகம் இருக்கும். இவை அனைத்தும் மிகவும் குறுகிய காலத்தில் நடந்துவிடும். இதனால் இந்த கொரில்லா மழையை கண்டறிவது கடினம்.
எனவே இதை முன்கூட்டியே கண்டுபிடிப்பதற்கு ஜப்பான் பல முயற்சிகளை செய்து வருகிறது. அதற்காக டோக்கியோ நகரிலுள்ள பல்கலைக் கழகத்தில் ஒரு ரேடாரை நிறுவியுள்ளது. இதன்மூலம் ரேடியோ அலைகளைக் கொண்டு காற்றிலுள்ள நீராவியின் அளவை கணக்கிடவுள்ளது. இந்த ரேடார் மூலம் கொரில்லா மழையை 30 நிமிடங்களுக்கு முன்னரே கணித்து விடலாம் என்று ஜப்பான் தெரிவித்துள்ளது.
வரும் 2020 இல் டோக்கியோ நகரில் ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ளதால் இந்த ரேடாரை அதற்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று ஜப்பான் அரசு முனைப்பு காட்டிவருகிறது குறிப்பிடத்தக்கது.