அமெரிக்காவில் ஒரு நபர் மட்டுமே பயணிக்கும் வகையில் சிறிய ரக விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சாலைகளில் போக்குவரத்து நெரிசலில் சிக்கும்போதெல்லாம் பறந்து செல்லும் வசதி இருந்தால் நன்றாக இருக்குமே எனத் தோன்றும். அந்த எண்ணத்தை ஈடேற்றும் வகையில் அமெரிக்காவின் டெக்சாஸைச் சேர்ந்த லிஃப்ட் (LIFT) என்ற நிறுவனம் ஒரு நபர் மட்டுமே பயணிக்கும் வகையில் ட்ரோன் வடிவிலான சிறிய ரக விமானத்தை வடிவமைத்துள்ளது. ஹெக்ஸா என பெயரிடப்பட்டுள்ள இந்த ட்ரோன் வடிவிலான விமானத்தின் எடை 196 கிலோ. மணிக்கு 63 மைல்கள் வேகத்தில் இது பறக்கும் என்கின்றனர் இதன் தயாரிப்பாளர்கள்.
டெக்சாஸில் அரசின் அனுமதியோடு இதன் சோதனை ஓட்டம் நடைபெற்றது. ஏற்கெனவே போயிங் மற்றும் ஏர்பஸ் நிறுவனங்கள் இத்தகைய சிறிய ரக விமானங்களை உற்பத்தி செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன. எடை குறைவான ட்ரோன் வடிவம் கொண்ட விமானத்தை லிஃப்ட் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
அமெரிக்க உள்நாட்டு விமான போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பு இந்த சிறிய ரக விமானத்தை இயக்க அனுமதி அளித்துள்ளது. இதன் மற்றொரு சிறப்பம்சம், இதை இயக்குபவருக்கு பைலட் உரிமம் தேவையில்லை என்பதுதான். நீரிலும் செல்லும் வகையில் இதை வடிவமைத்துள்ளதாக லிஃப்ட்நிறுவனம் கூறுகிறது.
இந்த ஆண்டு இறுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என தெரிவித்துள்ள அந்த நிறுவனம் ஹெக்ஸாவில் பயணிப்போருக்கு முதல்கட்டமாக அதை இயக்குவதற்கான பயிற்சி அளிக்கப்படுமென தெரிவித்துள்ளது.
ட்ரோன்களைபோல நிலத்தில் இருந்தபடியே இதை இயக்கவும் செய்யலாம். மின்சாரத்தில் இயக்குவது இதன் மற்றொரு சிறப்பம்சம். வரும் காலங்களில் இவை போக்குவரத்து துறையில் பெரிய மாற்றத்தை உண்டாக்கும் என ஹெக்ஸாவின் வடிவமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்