இஸ்ரோ முதல்முறையாக முழுக்க முழுக்க வணிக நோக்குடன் தனது முதல் ராக்கெட் சேவையை வரும் 16 ஆம் தேதி மேற்கொள்கிறது. இஸ்ரோ வெளிநாட்டு செயற்கோள்களை ஏவுவது ஒன்றும் புதிதல்ல. ஆனால், எப்போதெல்லாம் வெளிநாட்டு செயற்கோள்களை அனுப்புகிறதோ, அப்போதெல்லாம் உடன் ஏதோ ஒரு இந்திய செயற்கைக்கோளும் உடன் செல்லும். ஆனால், இந்த முறை இங்கிலாந்தை சேர்ந்த இரண்டு வெளிநாட்டு செயற்கைக்கோள்களை இஸ்ரோ தனது பிஎஸ்எல்வி சி42 ராக்கெட்டில் விண்ணுக்கு அனுப்புகிறது.
ஆந்திரம் மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவாண் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாம் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி42 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. இந்த ராக்கெட்டில் 889 கிலோ எடை கொண்ட இரண்டு செயற்கைக்கோள்கள் செல்கிறது. பூமி கண்காணிப்புக்காக வடிவமைக்கப்பட்ட இந்தச் செயற்கைக்கோள்கள் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தது. நோவாசார் மற்றும் எஸ்1-4 என பெயரிடப்பட்டுள்ள இந்தச் செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி சி42 ராக்கெட் பூமியின் புவி வட்டப் பாதையில் இருந்து 583 கி.மீ. தூரத்தில் நிலை நிறுத்தப்படும்.
இந்தச் செயற்கைக்கோள்கள் வனங்களை கண்காணிப்பது, நிலப் பரப்பு மற்றும் பனியால் மூடப்பட்ட இடங்களை ஆய்வு செய்து படம் எடுத்து பூமிக்கு அனுப்பும். மேலும் பேரிடப் மேலாண்மை கண்காணிப்புக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சதீஷ் தவாண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து எத்தனை மணிக்கு பிஎஸ்எல்வி சி43 ராக்கெட் ஏவப்படும் என்ற தகவலை இஸ்ரோ தெரிவிக்கவில்லை.