விண்வெளி குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக, நாட்டின் முதல் அறிவியல் செயற்கைக்கோளை இஸ்ரோ இன்று விண்ணில் ஏவியது. பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் மூலம் `எக்ஸ்போசாட்' என்ற செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இது குறித்து இஸ்ரோ தனது அதிகாரபூர்வ அறிவிப்பில் வெளியிட்டுள்ளது.அதில்,
“ XPOSAT செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது. 2024 வருடத் தொடக்கத்தில் சர்வதேச அளவில் அனுப்பப்பட்ட ஒரே திட்டமான பிஎஸ்எல்வி சி-58 / XpoSAT போலரிமீட்டர் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. மேலும் XPOSAT செயற்கைக்கோளில் தரவுகள் பெறப்பட்டு அடுத்த ஐந்து வருடங்களுக்கு இஸ்ரோ கட்டளை மையங்களுக்கு அனுப்பப்படும்.
அதன் மூலம் சேகரிக்கப்படும் தகவல்கள் மற்றும் விரிவான ஆய்வுகளின் அடிப்படையில் பிரபஞ்சத்தை பற்றிய ரகசியங்களை இஸ்ரோ ஒவ்வொன்றாக வெளியிடும்.
மேலும் 350 கிலோமீட்டர் உயரத்தில் POEM 10 செயற்கைகோள்கள் நிலை நிறுத்தும் பணிகள் தொடங்கியுள்ளது.” என்று தெரிவித்துள்ளது.
மேலும் XPOSAT செயற்கைக்கோள் தனது ஆய்வு பணியை தொடங்கியது என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
இந்த செயற்கைக்கோள் விண்வெளியில் உள்ள நிறமாலை, தூசு, கருந்துளை வாயுக்களின் மேகக்கூட்டமான `நெபுலா' உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்ய உள்ளது.
மேலும் காலநிலை மாற்றம் குறித்து ஆய்வு செய்வதற்காக, திருவனந்தபுரத்தில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மாணவிகள் தயாரித்த `வெசாட்' என்ற செயற்கைகோளும் இதனுடன் விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த ராக்கெட்டில் வெளிநாடுகளை சேர்ந்த மேலும் 10 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட உள்ளன. இதற்கான 25 மணி நேர கவுண்ட்டவுன் ஞாயிற்றுக்கிழமை காலை 8.10 மணிக்கு தொடங்கிய நிலையில் தற்போது விண்ணில் ஏவப்பட்டது.