தற்போதைய சூழலில் செல்போன் உபயோகம் என்பது, தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிட்டது. நாளுக்கு நாள் அதன் பயன்பாடும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நெருங்கியவர்களுடன் உரையாடல், செய்திகள், பணப் பரிவர்த்தனை, கேமிங் என அனைத்துக்கும் ஆதாரமாகிவிட்டது ஸ்மார்ட்போன்கள். பல்வேறு ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் போட்டிப் போட்டுக்கொண்டு விலை குறைவாகவும், அடிக்கடி அப்டேட் கொடுத்து புதிய புதிய ஆப்ஷன்களை கொடுப்பதும் இதற்கு ஒரு காரணமாக அமைகிறது.
குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் கிடைப்பதால், நகரங்கள் முதல் கிராமங்கள் வரை அனைத்து விதமான வியாபாரத்திலும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளே நடைபெறுகின்றன. இதனால் இந்தியாவின் பொருளாதாரமும் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. உலகளவில் சீனாவிற்கு அடுத்து இரண்டாவது மிகப்பெரிய ஸ்மார்ட்போன் சந்தையாக இருக்கிறது இந்தியா.
The Broadband India Forum கணிப்பின்படி, 2030ம் ஆண்டிற்குள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 12 சதவீதமாக இருக்கும் எனக் கூறியுள்ளது.
அதாவது, இந்தியாவில் 2030ஆம் ஆண்டுக்குள் செல்போன் செயலிகளுக்காகச் செலவிடப்படும் பணத்தின் அளவு சுமார் 800 பில்லியன் டாலர்கள் (₹64 லட்சம் கோடி) எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் விகிதத்தை விட நான்கு மடங்கு அதிகமாக இருக்கும்.
ஸ்மார்ட்போன் பயன்பாடுகளில் சமூக ஊடகங்கள் மற்றும் தகவல் தொடர்பு பயன்பாடுகள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் WhatsApp தான் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது. தொடர்ந்து Instagram, Facebook, Snapchat பதிவிறக்கங்களும் அதிகளவில் நடைபெற்று வருகின்றன.
சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம் போன்ற தென்கிழக்கு ஆசியாவின் பல்வேறு நாடுகளில் பிரபலமாக உள்ள சில சூப்பர் செயலிகள் இந்தியாவிலும் பயன்பாட்டிற்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகத் தெரிகிறது.
இந்தியாவில் 40 கோடிக்கும் அதிகமான கேமர்கள் மொபைல் கேமிங்கை விரும்புகின்றனர். இதனால் ஆப்ஸ் சந்தையில் (App Market) Mobile Gaming மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இதனால், ஸ்மார்ட்போன் அதிகரிப்பும், நெட்வொர்க் திறன்களின் மதிப்பும் 30% அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தியாவில் பாதுகாப்புக் காரணங்களுக்காக சீன மொபைல் கேம்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற தடைகள் அதிகரித்தால் ஆப்ஸ் சந்தையின் மதிப்பு பாதிக்கப்படலாம். 2020ம் ஆண்டு முதல் தற்போது வரை 100க்கும் அதிகமான கேமிங் செயலிகள் தடைசெய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் 2022ம் ஆண்டு 5G தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2025ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 50 சதவிகித ஸ்மார்ட்போன் பயனர்கள் 5G பயன்படுத்துபவர்களாகவும், 2028ம் ஆண்டிற்கும் இந்தியா முழுவதும் 70 கோடிக்கும் அதிகமானோர் 5G பயன்படுத்துபவர்களாகவும் இருப்பர்.
2030ம் ஆண்டுக்குள் 6G தொழில்நுட்பம் இந்தியாவில் முன்னணி தொழில்நுட்பமாக இருக்கும். இதற்கான “Bharat 6G Vision” பணிகள் நடைபெற்று வருகின்றன.
* இந்தியாவில் செயலிகள் மூலம் 2023ம் ஆண்டு 27,350.4 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது. இந்த வருவாய் 2022 ஆண்டு 22,377.6 கோடி ரூபாயாக இருந்தது.
* 2023ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 2.64 கோடி முறை செயலிகள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
* 2023ம் ஆண்டில் இந்தியாவில் 68.7 கோடி ஸ்மார்ட்போன் பயனர்கள் இருந்தனர்.
* 2023ல் இந்தியாவில் அதிக வசூல் செய்த செயலிகளில் Free Fire Max முதலிடம். இந்த செயலி மட்டும் 646.70 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.
* மக்கள் தொகையின் அடிப்படையில் இந்தியாவில் 2023ம் ஆண்டில் சுமார் 48.1% பேர் ஸ்மார்ட்போன் பயன்படுத்தியுள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக செயலிகள் மூலம் கிடைக்கும் வருவாயானது வேகமாக வளர்ந்துள்ளது. 2017-ல் 5,801.6 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருவாய் மதிப்பானது 2023ம் ஆண்டில் 27,350.4 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
2023ம் ஆண்டில் செயலிகள் மூலம் 27,350.4 கோடி ரூபாய் வருவாய் உயர்ந்துள்ளது. அதில் முதல் 10 இடங்களை எடுத்துக் கொண்டால் Free Fire Max கேம் செயலி மட்டும் ரூ.646.70 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி முதலிடத்தில் உள்ளது. Battlegrounds Mobile கேம் செயலி ரூ.389.77 கோடி வருவாய் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.
2017ம் ஆண்டு 30.01 கோடி மக்கள் மட்டுமே பயன்படுத்திவந்த ஸ்மார்ட்போன்கள் 2023ம் ஆண்டில் 68.7 கோடியாக அதிகரித்துள்ளது. 6 ஆண்டுகளில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையானது இரு மடங்காக அதிகரித்துள்ளது.
மக்கள் தொகையின் அடிப்படையில் எடுத்துக்கொண்டால் இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையானது 2017ம் ஆண்டில் 22.3 சதவிகிதமாக இருந்த நிலையில் 2023ம் ஆண்டில் 48.1 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
பலரும் எப்போதும் செல்போனிலேயே நேரம் செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள். இதன்படி பார்த்தால் 2023ம் ஆண்டில் ஒட்டுமொத்த இந்தியர்கள் சுமார் 1,19,300 கோடி மணிநேரத்தை செல்போனில் மட்டும் வீணடித்திருக்கிறோம்.
இதே 2020ல் அதாவது 3 ஆண்டுகளுக்கு முன்பு 65,500 கோடி மணிநேரமாக இருந்துள்ளது.
ஒவ்வொரு நாளும் புதிய புதிய செயலிகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. புதிய செயலிகளைப் பயன்படுத்திப் பார்க்க வேண்டும் என்ற எண்ணமும் பலருக்கும் இருப்பதால் கோடிக்கணக்கான செயலிகள் தினமும் பதிவிறக்கம் செய்யப்படுகின்றன.
2016ம் ஆண்டில் இந்தியாவில் மட்டும் 700 கோடி செயலிகள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டில் எடுத்துக்கொண்டால் 2,640 கோடி செயலிகள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
2023ம் ஆண்டில் இந்தியாவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது Instagram. சுமார் 24.5 கோடி பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இரண்டாவது இடத்தில் இருக்கும் Snapchat செயலியை 13.73 கோடி பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
செல்போன் பயன்படுத்துவது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தாலும், செல்போன் கதிர்வீச்சுகள் தரும் பாதிப்புகள் ஏராளம். இவற்றைத் தவிர்ப்பதே நம்மைப் பல பிரச்னைகளிலிருந்தும் காக்கும். முடிந்த வரை எச்சரிக்கையாகச் செயல்படுவது நல்லது.