உலகில் முன்னணி ஸ்மார்ட்போன் விற்பனை நிறுவனமான ஆப்பிள் தனது ஐபோன் 13 சீரியஸை, ஸ்ரீபெரும்புதூர் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த வருடத்திற்குள் இந்தியாவில் 70 லட்சம் ஐ போன்கள் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் தனது உற்பத்தி தளத்தைச் சீனாவில் இருந்து இந்தியாவிற்கும் தொடர்ந்த நிலையில், பல மாடல் போன்களைத் தயாரித்து இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் ஏற்றுமதி செய்து விற்பனை செய்து வருகிறது. இதுநாள் வரையில் பழைய ஸ்மார்ட்போன் மாடல்களை மட்டுமே இந்தியாவில் தயாரித்து வந்த ஆப்பிள், தற்போது உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வரும் லேட்டெஸ்ட் மாடலான ஐபோன் 13 சீரியஸ் போன்களைத் இந்தியாவில் தயாரிக்கத் துவங்கியுள்ளது.
இந்தியாவில் ஐபோன் 13 உற்பத்தி தொடங்குவதற்கான ஒப்பந்தம் பாக்ஸ்கான் மற்றும் விஸ்ட்ரான் (wistran) ஆகிய நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. பேகட்றான் (Pegatran) நிறுவனம் இந்த மாதத்திற்குள் ஐபோன் 12 உற்பத்தி தொடங்கும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் 2017 ஆம் ஆண்டு முதல் ஐ-போன் உற்பத்தியை இந்தியாவில் தொடங்கியுள்ளது. ஐபோன் 11 ,12 மற்றும் 13-க்காண உற்பத்தி இந்தியாவிலேயே நடைபெற்று வரும் நிலையில், முந்தைய ஐபோன் வடிவங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படவில்லை.
இந்நிலையில் முதல்முறையாக ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 13 உற்பத்தியை இந்தியாவில் தொடங்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஐபோன்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பரந்த உள்ளூர் உற்பத்தியால் ஆப்பிள் 2021ம் ஆண்டில் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் பிராண்டுகளில் ஒன்றாக இருக்கிறது. இந்தியாவில் ஆப்பிள் ஐ போன் நிறுவனத்தின் ஏற்றுமதிகள் ஆண்டுக்கு 108% வளர்ச்சியடைந்து வருவதுடன் 5 மில்லியன் யூனிட்கள் அல்லது சுமார் 4% சந்தைப் பங்கை எட்டியுள்ளது.
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 4 ஐபோன்களில் 3 ஐபோன் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. இப்புதிய ஐபோன் 13 உற்பத்தி மூலம் 100% விற்பனையும் உள்நாட்டு உற்பத்தியாக உயரலாம். 2022ஆம் நிதியாண்டில் மட்டும் சுமார் 70 லட்சம் போன்கள் விற்பனை செய்வதன் மூலம் மொபைல் போன் சந்தையில் 5.5 சதவீத பங்கை இந்தியாவில் வைத்துள்ளது.
ஆப்பிள் ஐபோன் நிறுவனம் சிறந்த பிராண்ட் ஆக இருந்தாலும் அதன் விலை அதிகம் என்பதால் இந்தியாவில் அதன் விற்பனை படிப்படியாக அதிகரித்து வருகிறது. 2021ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் முதல் இடத்தில் Xiaomi வகை செல்போன்களும், அதை 24% பேர் பயன் படுத்துகின்றனர்.
Oppo-வை 10%பேரும் பயன்படுத்துகின்றனர். அதைத்தொடர்ந்து ஆப்பிள் 4% பேர் பயன்படுத்தும் மொபைல் ஆக ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. அதிக நபர்கள் பயன்படுத்தும் முதல் 10 இடங்களில் 2021ஆம் ஆண்டு தான் ஆப்பிள் மொபைல் ஆறாம் இடம் பிடித்தது. ஐபோன் 13 மேலும் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பாக்ஸ்கான் தொழிற்சாலையின் உற்பத்தியின் மூலம் இந்தியாவின் அதன் சந்தை மற்றும் விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தொழில்நுட்ப நிறுவனர்கள் தெரிவிக்கின்றன.
2016 ஆம் ஆண்டு பாக்ஸ்கான் நிறுவனம் பெரும் நிதி நெருக்கடியை சந்தித்து மூடும் நிலையில் இருந்தது, இந்நிலையில் பாக்ஸ்கான் நிறுவனம் கடந்த 4 வருடங்களில் பல்வேறு செல்போன்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. தற்போது ஐபோன் 13 உற்பத்தியால் ஸ்ரீபெரும்புதூர் பாக்ஸ்கான் நிறுவனம் வளர்ச்சியை நோக்கி செல்லும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
- ந.பால வெற்றிவேல்