திருச்சி விமான நிலையம் அருகில் அண்ணா அறிவியல் மையத்தில் கோளரங்கம் அமைந்துள்ளது. 1999ம் ஆண்டு முன்னாள் தமிழக முதல்வர் மறைந்த கலைஞர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது.
கோளரங்கத்தில், 2003ம் ஆண்டு முப்பரிமாண படக்காட்சி அரங்கம் துவக்கப்பட்டது, சுற்றுச்சூழல் காட்சிக்கூடம், 3D காட்சியகம் ஆகியவையும் இங்கு அமைந்துள்ளது. தினந்தோறும் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் என ஏராளமானோர் வந்து செல்வர்.
வான்வெளியை கண்முன்னே காட்சிப்படுத்தும் வகையில் நட்சத்திரம், சூரிய குடும்பம் உள்ளிட்டவை கோளரங்கத்தில் தினம்தோறும் காட்சிப்படுத்தப்படும். இது மட்டுமல்லாது வான்வெளி சம்பந்தப்பட்ட பல்வேறு விஷயங்கள் மற்றும் அறிவியல் கோட்பாடுகளைக் கொண்டவை கோளரங்கத்தில் காட்சிப்படுத்தப்படுவது வழக்கம்.
இந்நிலையில், கோளரங்கத்தில் ஏற்கனவே இருந்த வான்வெளி காட்சிக்கூடம் தற்போது மேம்படுத்தப்பட்ட 4k தொழில்நுட்பத்தில் எண்ணிலக்க கோளரங்கமாக நவீனமாக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மூன்று கோடி மதிப்பில் பிரான்ஸ் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள DIGITAL PLANETORIUM SYSTEM என்று அழைக்கப்படும் 4K தொழில்நுட்பம் கொண்ட 2023 மாடல் "RSA COSMOS" எனும் உயரிய தொழில்நுட்பம் கொண்ட இயந்திரத்தின் மூலம் முற்றிலும் டிஜிட்டல் மயத்தில் வான்வெளி அரங்கு காட்சிப்படுத்தப்படுகிறது. அரைக்கோள கூரை கொண்ட வானவியல் அரங்கமாக உள்ள இந்த கோளரங்கத்தில் இரவு வானம் எப்படி இருக்கும், அதில் கோள்கள், பால்வெளி அண்டம், நெபுலாக்கள், விண்மீன் கூட்டங்கள், விண்மீன் மண்டலங்கள் உள்ளிட்டவை மிகப் பிரம்மாண்டமாக நம் கண் முன்னே காட்சிப்படுத்தப்படுகிறது. கோள்களின் வடிவம், நிறம், அதன் நகர்வுகள் மிகத் துல்லியமாக காட்சிப்படுத்தப்படுகிறது.
இப்பட காட்சி அரை மணி நேரம் காட்சிப்படுத்தப்படுகிறது. பட காட்சி தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஏதோ பால்வெளி அண்டத்தில், வான்வெளியில் நாம் இருப்பதைப் போன்ற உணர்வை ஒலி, ஒளி அமைப்புகள் ஏற்படுத்துகிறது.
இதற்கென உள் சுவரில் பொருத்தப்பட்டுள்ள உயர் தொழில்நுட்ப எண்ணிலக்க லேசர் பாஸ்பர் ஒளிப்பட கருவிகள், மேம்படுத்தப்பட்ட நவீன கணினிகள் மற்றும் 5.1 ஒளி அமைப்பு உதவியுடன், மிக அற்புதமாக நாம் நம்மையே மறந்து வான்வெளியில் பயணிக்கும் மனநிலையை திரையில் பார்க்க முடியும்.
இந்த அற்புதமான 3D கோளரங்க அமைப்பை பற்றி கோளரங்க திட்ட இயக்குநர், அகிலன் கூறுகையில்,
“இந்த எண்ணிலக்க கோளரங்க ஒளிபடக் கருவிகள் மூலம் உலகத்தின் எந்த நாட்டிலும், எந்த நேரத்திலும் காணக்கூடிய இரவு வானத்தை துல்லியமாக காண முடியும். குறிப்பாக ஒரே திசையில் அமைக்கப்பட்டுள்ள இருக்கை அமைப்பு ஒரு மெய்நிகர் வானியல் பயணத்திற்கு காண்போரை அழைத்துச் செல்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னைக்கு அடுத்தபடியாக திருச்சியில் அமைந்துள்ள கோளரங்கத்தில் தான் இந்தியாவிலேயே முதன்முறையாக அப்டேட்டட் செய்யப்பட்ட 4k தொழில்நுட்ப கருவி பயன்பாட்டிற்கு வந்துள்ளதாகவும், ஏற்கனவே இருந்த கருவி மெக்கட்ரானிக்ஸ் முறைப்படி Manual operate செய்யப்பட்ட நிலையில், தற்போது பொருத்தப்பட்டுள்ள ஆர்எஸ்ஏ காஸ்மாஸ் முற்றிலும் டிஜிட்டல் மயமானது.
மிக உயர்ந்த தொழில்நுட்பம் கொண்ட இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ஆறு காட்சிகள் திரையிடப்படப்படுகிறது. பொதுமக்கள் வான்வெளியை பற்றி இதன்மூலம் தெளிவாக அறிந்து கொள்ள உதவும் வகையில் இது உள்ளது. மேலும் இக்காட்சிக்கான நுழைவு கட்டணம் 25 ரூபாய் மட்டுமே” என்று தெரிவித்தார்.
இதோடு கூட கோளரங்க காட்சியை பார்வையிட வந்த பார்வையாளரான புனிதா இது பற்றி கூறுகையில்,
“கடந்த ஆறு மாதங்களாக பணி நடந்து வந்ததால் திரையிடப்படாமல் இருந்த நிலையில், தற்போது புதிய தொழில்நுட்பத்தின் மூலம் திரையிடப்படுள்ளது. இது வான்வெளியை கண்முன்னே காட்சிப்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல் நாம் அருகில் இருந்து உண்மையிலேயே பார்க்கின்ற ஒரு உணர்வை அது ஏற்படுத்துகிறது. குழந்தைகளுக்கும், விண்வெளி அறிவியல் சார்ந்த கற்றலில் உள்ள மாணவர்களுக்கும் இது உதவியாக இருக்கும் ”என்றார்.