இந்தியாவில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மேற்கொண்டு வரும் 5ஜி சோதனை வெள்ளோட்டம்தான் கொரோனா பரவ காரணம் என்ற வதந்தி பரவி வருகிறது. இதனை யாரோ சில விஷமிகள் செய்துள்ளனர். அதனை தடுக்க வேண்டும் என ஹரியானா மாநில தலைமைச் செயலர் விஜய் வரதனுக்கு கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளது இந்திய தொலைத்தொடர்பு சங்கம்.
அண்மையில் ஹரியானா மாநில பாரதிய கிசான் சங்க தலைவர் குருணாம் சிங், “இந்தியாவில் கொரோனா நோய் தொற்று பவரா 5ஜி வெள்ளோட்டம் கூட காரணமாக இருக்கலாம்” என சொல்லி இருந்தார்.
அதையடுத்தே இந்தக் கடிதத்தை கூட்டாக இணைந்து எழுதி உள்ளது இந்திய தொலைத்தொடர்பு சங்கம். “இது அப்பட்டமான வதந்தி. இந்தியாவில் 5ஜி சோதனை மேற்கொள்ள அரசு அனுமதி மட்டுமே வழங்கி உள்ளது. இன்னும் அதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்படவில்லை. இந்நிலையில், சில விஷமிகள் கொரோனா பரவலுக்கு 5ஜி சோதனை ஓட்டம் காரணம் என சொல்கின்றனர். அதனை உடனடியாக தடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்” என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹரியானா, பஞ்சாப் மற்றும் சண்டிகரில் 5ஜி சோதனை மேற்கொள்ளப்படும் பட்டியலில் இல்லை எனவும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.