கடந்த ஆண்டு ஜூலை மாதம் 14ம் தேதி இஸ்ரோ நிலவிற்கு சந்திரயான் 3 என்ற விண்கலத்தை அனுப்பியது. 40 நாட்கள் அது விண்வெளியில் பயணித்து, சரியாக ஆகஸ்ட் 23 அன்று நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டர் மூலம் பத்திரமாக தரையிறங்கி உலக சாதனையை படைத்தது.
இதை உலக சாதனை எனக்கூற காரணம், இதுவரை உலகின் எந்த ஒரு நாடும் நிலவின் தென் துருவத்தில் விண்கலனை தரையிறக்கியது கிடையாது. ஆகவே இந்தியாவின் இந்த சாதனையை கொண்டாடும் தினமாக மத்திய அரசு ஆகஸ்ட் 23-ஐ தேசிய விண்வெளி தினமாக அறிவித்தது. இதன்பேரில்,
இன்று இந்தியா தனது முதல் தேசிய விண்வெளி தினத்தை கொண்டாடி வருகிறது.
சந்திராயன் 3-ல் இருந்து தரையிரங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து பிரிந்த பிரக்யான் ரோவர், கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு நிலவின் தென் துருவப் பகுதியில் தனது ஆய்வினை மேற்கொண்டது.
அதில் தனது முதல் கண்டுபிடிப்பாக ‘நிலவின் தரைப்பகுதியில் ஆழம் செல்லச் செல்ல வெப்பநிலை மிக அதிகமாக குறைகிறது’ என்பதை ரோவர் கண்டறிந்தது. இஸ்ரோ விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பின்படி நிலவின்
மேற்பரப்பு 50 டிகிரி செல்சியஸ்ஸாகவும்,
2 செமீ ஆழத்தில் 30 முதல் 40 டிகிரி செல்சியஸாகவும்,
6 செமீ ஆழத்தில் 0 முதல் -10 டிகிரி செல்சியஸாகவும்
இருப்பதாக கூறினர். இது அனைவருக்கும் ஆச்சர்யத்தை அளித்தது.
இதையடுத்து இரண்டாவது சாதனையாக நிலவில் ஆக்சிஜன், சல்பர், அலுமினியம், கால்சியம், இரும்பு, மாங்கனீஸ், சிலிக்கான் போன்ற பல தனிமங்கள் இருப்பதை ரோவர் கண்டுபிடித்து தகவல் அனுப்பியது. இதில் சல்பர் இருப்பதை முதல் முறையாக சந்திரயான் 3 கண்டுபிடித்து உலகிற்கு சொல்லி இஸ்ரோவிற்கு பெருமை சேர்த்தது.
அது போல நிலவின் தென் துருவத்தில் டைட்டேனியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது அனைவரின் ஆர்வத்தையும் மேலும் அதிகரித்தது. (பூமியில் டைட்டேனியம் என்பது மிகமிக அரிதான ஒரு தாது. எதிர்காலத்தில் நிலவின் மீதான ஆதிக்கம் அதிகரிக்கும்பொழுது இந்த தாதுக்களும் தனிமங்களும் நிச்சயம் உலகத்துக்கு பயன்படும்.)
இப்படி சந்திரனில் எண்ணற்ற விஷயங்களை கண்டறிந்து, உலகமே இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த விக்ரம் லேண்டரானது, வெறும் 15 தினங்களுக்குள்ளாக தன் வேலையை முடித்துக்கொண்டது. அதன்பின் விக்ரம் லேண்டரும், பிரக்யான் ரோவரும் உறக்க நிலைக்கு சென்றன. இருப்பினும் ‘இன்னும் 15 நாட்களுக்குப்பின் லேண்டர், ரோவரை நம்மால் எழுப்பமுடியும்’ என நம்பினர் இஸ்ரோ விஞ்ஞானிகள். ஆனால் அதில் ஏமாற்றமே அடைந்தனர் என்பது சோகம்.
இப்படியாக சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கி சாதனை செய்ததை கொண்டாடும் விதமாக, அது தரையிறங்கிய நாளான ஆகஸ்ட் 23 ‘தேசிய விண்வெளி தினம்’ என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. அதைத்தான் இன்று நாம் கொண்டாடி வருகிறோம்.
சந்திராயன் 3 நிலவில் தரையிறங்கி சாதனை செய்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், சந்திரயான்-3க்கு சர்வதேச விண்வெளி கூட்டமைப்பால், 'உலக விண்வெளி விருது' வழங்கப்பட்டிருக்கிறது. இத்தாலியின் மிலனில் 75 வது சர்வதேச விண்வெளி மாநாட்டின் தொடக்க விழாவின் போது (அக்டோபர் 14 அன்று) இந்த விருது வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.