மக்களின் நோக்கியா - இது நோக்கியா நாஸ்டால்ஜியா

மக்களின் நோக்கியா - இது நோக்கியா நாஸ்டால்ஜியா
மக்களின் நோக்கியா - இது நோக்கியா நாஸ்டால்ஜியா
Published on

நோக்கியா - ஆன் செய்தவுடன், குழந்தையின் கையும், இள வயது நபரின் கையும் மிக அழகாக இணையும் லோகோவையும், ‘Connecting People' என்னும் ஸ்லோகனையும் மீண்டும் பார்க்கும் தருணமிது.

முதல் காதலைப் போல பலருக்கும் மிகப் பிரியமானது நோக்கியா. நம்மில் பெரும்பானவர்களுக்கு முதல் மொபைல் ஃபோன் ’3310’ நோக்கியாதான் (செங்கல் செட் என்று பேசிக்கொள்வதைக் கேட்டிருப்போம்). நோக்கியா ஃபோன்கள் நம்பகத்தன்மைக்கும், பேட்டரி திறனுக்கு பெயர்போனது என்பதால், எத்தனை விலையுயர்ந்த அல்ட்ரா மாடல் ஸ்மார்ட்ஃபோன்களை வைத்திருந்தாலும், நோக்கியா காதல் நம்மில் பலருக்கு குறைந்திருக்காது. நினைவுச் சின்னமாகவாவது அந்த பழைய மொபைலைப் பாதுகாப்பவர்கள் இருப்பார்கள்.

இந்தியாவில் முதன்முறையாக, எப்படி பேசினாலும் நீடித்து நின்ற பேட்டரி, ஸ்னேக் கேம், நாமே ம்யூசிக் கம்போசராக மாறி கம்போஸ் செய்யும் ரிங்டோன் என 3310 வைத்திருந்தவர்களுக்கு அது ஒரு பெரிய சொத்தாக இருந்தது. ஆண்ட்ராய்டுக்கு மாறி, ட்ச் ஸ்க்ரீன், ஃபிங்கர்ப்ரிண்ட் லாக் என மொபைல்களை வாங்கிக் குவித்திருந்தாலும் முதல் நோக்கியாவை யாராலும் மறந்திருக்க முடியாது. 

நோக்கியா மொபைலின் பயணம்

2000-ஆம் ஆண்டில், அறிமுகம் செய்யப்பட்டது நோக்கியா 3310. பின்பு 2003-இல், நோக்கியா 1100வும் நோக்கியா 2100-வும், 2004-இல் நோக்கியா 3230-வும் நோக்கியா 6020-வும் நோக்கியா 7610-வும் அறிமுகமானது. 2007-இல் நோக்கியா 3110 க்ளாசிக்,  அதன் பிறகு நோக்கியா 6600 (கேமரா, கேமரா, கேமரா. இப்போது நீங்கள் வீடியோவும் எடுக்கலாம் என்று சொல்லும் அதன் விளம்பரம்) பின்பு, 2005-இல் எல்லா இளைஞர்களும் வாங்க ஆசைப்பட்ட நோக்கியா N-70 சந்தைக்கு வந்தது. நோக்கியா N70 இரண்டு கேமராக்களைக் கொண்டது. கடைசியாக நோக்கியா N-கேஜ் வீடியோ கேமின் வடிவத்துடன், விளையாடுவதற்காக மட்டுமே வாங்கப்பட்ட நோக்கியா மொபைல் என பல ஆண்டுகள் வாடிக்கையாளர்களின் செல்லம் நோக்கியாதான்.

ஐந்தாயிரம், ஆராயிரத்திற்கு ஸ்மார்ட்ஃபோன்கள் கிடைக்கத்தொடங்கிவிட்டாலும், வாடிக்கையாளர்களின் அன்பையும், நம்பிக்கையையும் நம்பி, சாதாரண மொபைலாகவே களத்தில் குதித்திருக்கிறது, ஹெச்.எம்.டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 3310.

மேலும், இதே வரிசையில் மூன்று நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்ஃபோன்களை (நோக்கியா 3, நோக்கியா 5, நோக்கியா 6) அறிமுகப்படுத்துகிறது ஹெச்.எம்.டி குளோபல் நிறுவனம். நோக்கியா 3, 4 மற்றும் 5 ஸ்மார்ட்ஃபோன்களையும் வெளியிட்டுப்பேசிய நோக்கியா இந்தியா நிறுவனத்தின் துணைத்தலைவர் அஜய் மேத்தா, "நோக்கியா எப்போதும் மக்களின் பிராண்ட், தனித்துவமானது. நம்பிக்கைதான் நோக்கியாவின் ஆதாரம். புதிதாக வெளியிடப்பட்டுள்ள ஸ்மார்ட்ஃபோன்கள் இதை உறுதிசெய்யும்" எனத் தெரிவித்திருக்கிறார்.

தற்போது அறிமுகமாகியிருக்கும் இந்த நோக்கியா ஸ்மார்ட்ஃபோகள் சந்தையில் கடும் போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. நோக்கியா பிராண்ட் மொபைல்கள் மற்றும் டேப்லட்டுகளை உலகளாவிய சந்தைகளில் மீண்டும் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு, ஹெச்.எம்.டி குளோபல் 10 ஆண்டுகளுக்கு உரிமம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நோக்கியாவுடன் மீண்டும் அந்த லவ்லி காதல் வருமா? பார்ப்போம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com