இணையதள ஆதிக்க உலகில் அதன் வேகத்தைப் பொறுத்ததே அந்தந்த நாடுகளின் தொழில்நுட்ப வலிமை மதிப்பிடப்படும் நிலை உள்ளது. தற்போது 100 கிகாபிட்ஸ் வேகமே உலகெங்கும் சராசரியான வேகமாக உள்ள நிலையில் அமெரிக்கா 400 கிகாபைட்ஸ் வேகத்திற்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவிற்கு போட்டியாக பல்வேறு தளங்களிலும் உருவெடுத்து வரும் சீனா ஒரே பாய்ச்சலில் 1,200 கிகாபிட்ஸ் என்ற வியக்கவைக்கும் வேகத்தில் இணையதள சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. சைனா மொபைல், ஹுவே டெக்னாலஜீஸ், கார்னெட் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து உலகின் அதிவேக இணையதள சேவையை அறிமுகப்படுத்தியுள்ளன.
இதன் வேகம் ஒரு நொடிக்கு 1200 கிகாபிட்ஸ் என கூறப்படுகிறது. பெய்ஜிங், வுஹான், குவாங்சூ ஆகிய நகரங்களில் சுமார் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு கண்ணாடி இழை குழாய் அமைத்து இந்த மின்னல் வேக இணையதள சேவை தரப்படுகிறது. சீனாவின் இணையதள கட்டமைப்பு வசதியில் இது மிகப்பெரிய திருப்பமாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். HD தொழில்நுட்பம் கொண்ட 150 திரைப்படங்களை ஒரே ஒரு நொடியில் பதிவேற்றம், பதிவிறக்கம் செய்ய முடியும் என ஹுவே டெக்னாலஜீஸ் தெரிவித்துள்ளது. இது தவிர மேலும் பல தொழில்நுட்ப அதிசயங்களுக்கும் தங்கள் கண்டுபிடிப்பு பாதை அமைத்து தரும் என்றும் அந்நிறுவனம் கூறுகிறது.