முன்னணி ஐடி நிறுவனமான ஹெச்சிஎல் நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு ரூ.700 கோடிக்கான ஒன் டைம் போனஸை அறிவித்துள்ளது. அந்நிறுவனம் ரூ.7800 கோடி லாபத்தை ஈட்டிய நிலையில் இந்த சிறப்பு போனஸை அறிவித்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த ஷிவ் நாடாரால் தொடங்கப்பட்டு வெற்றிநடை போடும் ஐடி நிறுவனமாக உள்ளது ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ் நிறுவனம். நொய்டாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டாலும் உலகம் முழுவதும் விரிந்துள்ளது இந்நிறுவனம். ஐடி துறையில் சிறந்து விளங்கும் ஹெச்சிஎல் கொரோனா காலங்களிலும் சிறப்பான லாபத்தை அடைந்தது.
கொரோனாவால் பல தொழில்கள் முடங்கினாலும், ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை பார்க்க அனுமதித்து தங்களது லாபத்தை சாதித்துள்ளது ஹெச்சிஎல். 2020ல் புதிய மைல்கல்லாக ரூ.7800 கோடி இலக்கை எட்டியுள்ளது ஹெச்சிஎல். இந்நிலையில் இந்த சாதனைக்கு காரணமான ஊழியர்களுக்கு சிறப்பு போனஸ் வழங்கி ஊக்குவிக்கவுள்ளது.
சுமார் ஒரு லட்சத்து 50,000க்கும் அதிகமான ஊழியர்கள் இந்த போனஸின் பயன்பெறுவார்கள் என்றும், இந்த மாதத்துக்குள் போனஸ் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள ஹெச்சிஎல் நிறுவனம், ஒன் டைம் போனஸானது உலகளவில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் உண்டு. கொரோனா நேரத்திலும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி ரூ.7800 கோடி இலக்கை எட்ட உதவிய ஊழியர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளது.