மின்னணு பொருள் உற்பத்தி நிறுவனங்களுக்கு 50% நிதி சலுகை: மத்திய அரசு அறிவிப்பு

மின்னணு பொருள் உற்பத்தி நிறுவனங்களுக்கு 50% நிதி சலுகை: மத்திய அரசு அறிவிப்பு
மின்னணு பொருள் உற்பத்தி நிறுவனங்களுக்கு 50% நிதி சலுகை: மத்திய அரசு அறிவிப்பு
Published on

மின்னணு பொருட்களின் செயல்பாடுகளில் ஆதாரமாக விளங்கும் செமிகண்டக்டர் உற்பத்தியை அதிகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 76,000 கோடி மதிப்பில் செமிகண்டக்டர் உற்பத்தி திட்டங்களை தொடங்குவதற்கான அறிவிப்பை மத்திய மின்னணு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.

இந்த நேரத்தில், நாம் அன்றாடம் பயன்படுத்தும் கைபேசி எவ்வாறு செயல்படுகிறது என்று நாம் தெரிந்துக்கொள்வது மிகச்சரியாக இருக்கும். அந்தவகையில் முதலில் ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ் உள்ளிட்டவை மென்பொருள் மூலம் செயல்பட்டாலும் வன்பொருள் (Hardware) ஆக மின்னணு கருவிகளை இயக்குவது எலக்ட்ரானிக் செமிகண்டக்டர் சிப்களில் இருந்து இவற்றை தொடங்குவோம். குறை மின் கடத்தி என அழைக்கப்படும் இந்த செமிகண்டக்டர் வருகைக்குப் பிறகு தான் மின்னணுத் துறையில் மாபெரும் புரட்சி ஏற்பட்டது. கால்குலேட்டரில் தொடங்கி கணினி, தொடுதிரை, கைபேசி, வாகனம், கேமரா போன்ற அனைத்து மின்னணுப் பொருட்களின் இதயமாக இந்த செமிகண்டக்டர் பொருட்கள் விளங்குகின்றன. தைவான், தென் கொரியா, சீனா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் அதிக அளவில் செமிகண்டக்டர் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கின்றன.

உலகில் அதிக மின்னணுப் பொருட்களின் பயனாளர்களை கொண்ட இந்தியா, கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆசிய கிழக்கு நாடுகளிலிருந்து மின்னணு பொருட்களை இறக்குமதி செய்யும் நிலையில் இருந்தது. ஆனால் தற்போது மின்னணுப் பொருட்களின் உற்பத்தியில் கணிசமான அளவு இந்தியா உயர்ந்து வந்தாலும், மின்னணுப் பொருட்களின் தயாரிப்பில் மூலப்பொருளாக விளங்கும் செமி கண்டக்டர் பொருட்களை மட்டும் தைவான் சீனாவிலிருந்து இறக்குமதி செய்து வந்தது. இந்நிலையில் மத்திய அரசு செமிகண்டக்டர் உற்பத்தி திட்டங்களை இந்தியாவில் தொடங்குவதாக அறிவித்துள்ளது. மின்னணுப் பொருட்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கும், மின்னணு பொருட்களின் தயாரிப்பு, மூலப்பொருள் பற்றாக்குறை காரணமாக பாதிப்பு ஏற்படாத வகையிலும் தொலைநோக்கு திட்டமாக இந்த திட்டத்தை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதன்மூலம் 2025-26க்குள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஐந்தில் ஒரு பங்கு டிஜிட்டல் மற்றும் பொருட்கள் உற்பத்தியின் மூலம் நடைபெறுவதற்கான திட்ட வரையறை உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்த இருபது வருடத்தில் 9.57 லட்சம் கோடி அளவிற்கு செமிகண்டக்டர் உற்பத்தியை அதிகரிப்பதற்கும், அதில் 5 லட்சம் கோடி அளவிலான செமிகண்டக்டர் பொருட்களை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. செமிகண்டக்டர் உற்பத்தி, கட்டுருவாக்கம் (Fabrication), தொடு திரை உற்பத்தி போன்ற உற்பத்திகளை செய்யும் நிறுவனங்களுக்கு 50% அளவிற்கு நிதி சலுகை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் கடந்த பத்து வருடங்களில் 5 லட்சம் கோடி அளவிற்கு மின்னணுப் பொருட்களின் உற்பத்தி தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அது அடுத்த 20 வருடங்களில் 18 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மின்னணு பொருட்கள் உற்பத்தியின் ஆதாரமாக விளங்கும் செமிகண்டக்டர் உற்பத்தி தொழில்துறையில் இந்தியாவை வேறு ஒரு பரிமாணத்தில் பயணிக்க வழிவகுக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு Ficci தலைவர் ராஜாராம் பேசும்போது

மென்பொருளில் இந்தியா உலகில் மூன்றாவது அதிக ஏற்றுமதி செய்யும் நாடாக உள்ளது ஆனால் வன்பொருள் தயாரிப்பில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை நாம் பெறாமல் இருந்தோம் அது தற்போது சாத்தியமாக தொடங்கியுள்ளது செமி கண்டக்டர் உற்பத்தியை தொடங்க சலுகை அளித்து இருப்பதன் மூலம் அடுத்த பத்து வருடங்களில் மின்னணுத் துறையில் இந்தியா வல்லரசாகும். கைப்பேசி தயாரிப்பில் உலகில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் அதற்கான மூலப்பொருளான செமிகண்டக்டர் பொருட்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளது இது கால தாமதமான அறிவிப்பு என்றாலும் முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பு. இதை நாங்கள் வரவேற்கிறோம்

சிறிய அளவிலான செமிகண்டக்டர் சிப்கள் முதல் சூப்பர் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படும் மதர்போர்டு வரை அனைத்து விதமான செமி கண்டக்டர் உதிரி பொருட்களை தயாரிக்க வடிவமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவின் தமிழ்நாடு மின்னணு பொருட்களின் உற்பத்தியில் கணிசமான பங்கு வகிக்கிறது. 2025ல் இந்தியாவின் மொத்த மின்னணுப் பொருட்களின் உற்பத்தியில் 25 சதவீதம் தமிழகம் வகிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செமி கண்டக்டர் உற்பத்தி சம்மந்தமாக மத்திய அரசின் இந்த அறிவிப்பு தொழில் மாநிலமான தமிழகத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து இந்திய உற்பத்தியாளர் சங்கத்தின் முன்னாள் தேசிய தலைவர் கே. இ. ரகுநாதன் பேசும்போது, தற்போது எடுக்கப்பட்டிருக்கும் இந்த முடிவு தொழில்துறை வளர்ச்சியில் முக்கிய தடமாக இருக்கும். இவ்வளவு நாட்கள் செமிகண்டக்டர் பொருட்களை இறக்குமதி செய்துவந்த நாம் உற்பத்தி செய்ய தொடங்க போகிறோம். இந்தியாவில் மின்னணு பொருட்களின் உற்பத்தியில் 25 சதவீதம் பங்கு வகிக்கும் தமிழகம் செமிகண்டக்டர் உற்பத்தியை தொடங்குவதற்கான முன்னெடுப்பை தொடங்கவேண்டும். இங்கு அதற்கான சூழல் தொழில் செய்வதற்கான அடித்தளம் அமைந்துள்ளது. பொறியியல் படித்தவர்கள் தாண்டி சிறு குறு தொழில் செய்வோரையும் வேலைவாய்ப்பில் ஈடுபட வைக்கும். சினி கண்டக்டர் பொருட்கள் செய்வதற்கு தண்ணீர் அதிகம் தேவைப்படும் எனவே தமிழகத்தில் அது சம்பந்தமான தொழிற்சாலைகளை தொடங்குவதற்கான வசதிகளையும் முன்னெடுப்பை தமிழக அரசு தொடங்க வேண்டும்.

ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளில் மையமாக விளங்கும் சென்னையில் செமிகண்டக்டர் பற்றாக்குறையால் கடந்த இரண்டு வருடங்களாக கார் உற்பத்தியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக அந்தத் துறை நிபுணர்கள் கூறி வரும் நிலையில், செமிகண்டக்டர் உற்பத்தி ஆட்டோமொபைல் துறைக்கும் பெரும் துணையாக இருக்கும் என கூறப்படுகிறது. செமிகண்டக்டர் உற்பத்திக்கான மூலப்பொருளான சிலிகான், ஜெர்மானியம் போன்றவற்றை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யவும் தைவான் இஸ்ரேல் போன்ற நாடுகளின் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி செமிகண்டக்டர் களை உற்பத்தி செய்வதற்கும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அன்றாட வாழ்வில் இன்றியமையாத ஒன்றாகி விட்ட மின்னணு பொருட்களின் செயல்பாடுகளுக்கு ஆதாரமாக விளங்கும் செமிகொண்டக்டர் பொருட்களின் உற்பத்தி அதிகரித்து இருப்பதன் மூலம் அடுத்த 10 ஆண்டுகளில் மின்னணு துறையில், குறிப்பிடத்தக்க வளர்ச்சியை ஏற்படுத்தும் என்றும் அதன்மூலம் வருங்காலங்களில் செல்போன் முதல் கைக்கடிகாரம் வரை அனைத்து மின்னணுப் பொருட்களின் விலையும் குறைய வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

- ந.பால வெற்றிவேல்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com