ப்ரீ-இன்ஸ்டால் செயலிகளுக்கு தடைவிதிக்க தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சில ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களது நிறுவனம் தயாரித்த செயலிகளையும், பிரபலமாக இருக்கும் செயலிகளையும் போன்களில் ப்ரீ-இன்ஸ்டால் (Pre-Installed Apps) செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றன. அதாவது, ஒரு பயனர் அவருக்கு தேவைப்படும் செயலிகளை கூகுள் ப்ளே ஸ்டோரிலோ அல்லது ஆப்ஸ் ஸ்டோரிலோ தேடி இன்ஸ்டால் செய்து கொள்வதுதான் வழக்கம்.
ஆனால் பெரும்பாலான ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் என்ன செய்கிறது என்றால், குறிப்பிட்ட சில செயலிகளை போன்களில் ஏற்கனவே இன்ஸ்டால் செய்துகொடுத்து விற்பனை செய்கின்றன. இதில் சில செயலிகளை அன்-இன்ஸ்டால் செய்ய முடியாதவாறு பிரீ-இன்ஸ்டால் செய்து வழங்கப்படுகின்றன. குறிப்பாக சியாமி, சாம்சங், ஆப்பிள் போன்ற செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தின் செயலிகளை பிரீ-இன்ஸ்டால் செய்தே விற்பனைக்கு அனுப்புகின்றன.
இவ்வாறு தேவையற்ற செயலிகளை ப்ரீ-இன்ஸ்டால் செய்து விற்பனை செய்வது பயனர்களின் தனியுரிமை கொள்கைக்கு எதிரானது என்றும், இதுபோன்ற ப்ரீ-இன்ஸ்டால் செயலிகளால் பயனர்களின் தரவுகள் கசிய வாய்ப்புள்ளதாகவும் வல்லுனர்கள் கூறிவந்தனர்.
இந்த நிலையில் ப்ரீ-இன்ஸ்டால்டு செயலிகளுக்கு தடைவிதிக்க மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் மத்திய அரசு கலந்தாலோசனை செய்துள்ளதாகவும், ப்ரீ-இன்ஸ்டால் செயலிகளுக்கு எதிராக விரைவில் புதிய விதிகளை கொண்டுவர உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.