பப்ஜி, டிக்டாக் செயலிகள் குறித்து பெற்றோர்களுக்கு கோவா அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
பொழுதுபோக்கு என்ற எல்லையைத் தாண்டி ஆன்லைன் விளையாட்டுகளும், சமூக வலைத்தள செயலிகளும் பயன்படுத்துபவர்களை அடிமையாக்கி வருகின்றன. பப்ஜி போன்ற விளையாட்டுகளாலும், டிக்டாக் போன்ற செயலிகளாலும் நாளுக்கு நாள் பிரச்னைகள் அதிகரித்து வருவதாகவே கூறப்படுகிறது.
குறிப்பாக பப்ஜி விளையாட்டை தடை செய்ய பல நாட்டு அரசுகளும் யோசித்து வருகின்றன. இந்தியாவில் பப்ஜி விளையாட்டை குஜராத் அரசு ஏற்கெனவே தடை செய்துள்ளது. இன்னும் சில மாநிலங்கள் இந்த விளையாட்டை தடை செய்ய தீவிரமாக யோசித்து வருகின்றன. நேபாளம். ஈராக் நாடுகள் பப்ஜி விளையாட்டுகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது
இந்நிலையில் பப்ஜி, டிக்டாக் செயலிகள் குறித்து பெற்றோர்களுக்கு கோவா அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் மாணவர்கள் மத்தியில் டிக்டாக், பப்ஜி மீதான ஆர்வத்தை குறைக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து பேசியுள்ள கோவா முதலமைச்சர் ப்ரமோத் சாவந்த், டிக்டாக், பப்ஜி செயலிகளை தரவிறக்கம் செய்ய வேண்டாம் என கல்வி இயக்குநரகம் மூலமாக பெற்றோர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளோம். இந்தச் செயலிகள் மூலமாக மாணவர்களுக்கு மனதளவிலும், உடலளவிலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை குறிப்பிட்டு இந்தச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.