அறிவோம் அறிவியல் 7 | செவ்வாய் கிரகத்துடன் மோதி மோதிரம் ஆகப்போகுகிறதா அதன் சந்திரன்?

சூரிய குடும்பத்தில் உள்ள 4 வது கிரகம்தான் செவ்வாய். இந்த கிரகமும் பூமிக்கு அருகிலேயே இருக்கிறது. அதாவது பூமியின் வலதுகை வெள்ளி என்றால் இடது கை செவ்வாய்.
சூரிய குடும்பம்
சூரிய குடும்பம்கூகுள்
Published on

அறிவோம் அறிவியலில் இன்று மார்ஸ், அதாவது செவ்வாய் கிரகங்கத்தை பற்றி பார்க்கலாம்.

சூரிய குடும்பத்தில் உள்ள 4 வது கிரகம்தான் செவ்வாய். இந்த கிரகம், பூமிக்கு அருகிலேயே இருக்கிறது. அதாவது

பூமியின் வலதுகை வெள்ளி என்றால் இடது கை செவ்வாய்.!

வெள்ளி எப்படி வானத்தில் பிரகாசமாக தெரிகிறதோ அதே போல் இதுவும் தெரியும். ஆனால் பிரகாசமாக இல்லை... சிவப்பாய்.

‘ஏலியன்ஸ் செவ்வாய் கிரகத்தில் இருக்கிறார்கள்; அவர்கள்தான் பறக்கும் தட்டில் பூமிக்கு வருகிறார்கள்’ என்று சொல்வதெல்லாம் கட்டுக்கதை. ஏலியன்ஸை பற்றி சொல்ல வேண்டுமென்றால் அது தனி அத்யாயம் அதை வேறொரு நாளில் பார்க்கலாம்.

செவ்வாய் கிரகம் நமது சூரிய மண்டலத்தில் அதிகளவு ஆராயப்பட்ட கோள்களில் ஒன்று, அமெரிக்கா இதனை ஆராய்வதற்கு இப்போதுகூட ரோவர்களை அனுப்பியுள்ளது. அது கொடுத்த தகவல்களின் அடிப்படையில், சில தகவல்களை நாம் இங்கே பார்க்கலாம்.

செவ்வாய்
செவ்வாய்

பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகம் தடிமனான வளிமண்டலத்துடன் மிகவும் ஈரமாகவும் வெப்பமாகவும் இருந்தது என்று கூறப்படுகிறது. அதனால் மனிதனால் அங்கு உயிர்வாழமுடியுமா என்ற கேள்விக்கு விடை காணும் முயற்சியில் நாசா இறங்கியுள்ளது.

ரெட் பிளானட்

செவ்வாய் கிரகத்தில் உள்ள இரும்பு தாதுக்கள் ஆக்ஸிஜனேற்றத்தால் துருப்பிடித்து காணப்படுவதால், இதன் மேற்பரப்பு சிவப்பு நிறமாக இருக்கிறது அதனால் இதை "ரெட் பிளானட்" என்று கூறுகிறார்கள்.

அளவு மற்றும் தூரம்

சிலருக்கு பூமியை சுற்றிவர மிகவும் பிடிக்கும் எப்பொழுதும் பயணத்திலேயே இருப்பர். அப்படிபட்டவர்கள் செவ்வாய் சென்றால் ஒன்றுக்கு இருமுறை செவ்வாயை சுற்றி வருவார்கள். ஏனெனில்

பூமியின் பாதி அளவுதான் செவ்வாய் இருக்குமாம்.

அதாவது 2,106 மைல்கள் (3,390 கிலோமீட்டர்கள்) அதன் விட்டம்.

NGMPC22 - 147

சுற்றுப்பாதை மற்றும் சுழற்சி

பூமியைப்போலவே செவ்வாயிலும் ஒரு நாள் என்பது 24 மணி நேரமும் 6 நிமிடங்கள். கிட்டதட்ட பூமியைப் போன்றுதான் ஆறு நிமிடம் அதிகம் அவ்வளவுதான். ஆனால் அது சூரியனை சுற்றி வர 669.6 நாட்கள் எடுத்துக்கொள்கிறது. இதனால் அங்கு ஒவ்வொரு பருவநிலையானது பல மாதங்கள் நீட்டித்து இருக்கும்.

என்னது செவ்வாய் சூரியனை நேராக சுற்றுகிறதா என்று கேட்கிறீர்களா?... இல்லை இதுவும் பூமியைப்போலவே 25 டிகிரி சாய்ந்தநிலையில் சூரியனை சுற்றி வருகிறது.

நிலவு

பூமிக்கு எப்படி சந்திரன் நிலவாக இருக்கிறதோ... அதே போல் செவ்வாய்க்கும் நிலவு உண்டு. ஆனால் ஒன்றல்ல... இரண்டு நிலவு. அதில் ஒன்று பார்ப்பதற்கு உருளைக்கிழங்கு போன்று இருக்கும் (அட.. நாசா எடுத்து அனுப்பிய படத்தை பார்க்கும் போது எங்களுக்கு அப்படிதான் தோன்றியது). விஞ்ஞானிகள் இந்த இரு நிலவிற்கும், போபோஸ் மற்றும் டீமோஸ் என்று பெயரிட்டு இருக்கிறார்கள்.

போபோஸ் மற்றும் டீமோஸ் இந்த பெயரை எங்கோ கேள்விபட்டது போல இருக்கா... நீங்க நினைச்சது சரிதான். இந்த பெயர்கள் கிரேக்க நாட்டின் போர் கடவுள்களின் பெயர்கள். அதைதான் நிலவிற்கு சூட்டியுள்ளனர். இதில் போபோஸ் நிலவில் கரடுமுரடான, ஆழமான பள்ளங்கள் ஆங்காங்கே இருக்கிறது. என்னதான் இருந்தாலும் நமது நிலவுக்கு ஈடாகுமா...?

போபோஸ் நிலவு
போபோஸ் நிலவு

ஆனால் விஞ்ஞானிகள் ஒரு அதிர்ச்சி செய்தியை கூறுகின்றனர். அதாவது சுமார் 50 மில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு இந்த போபோஸ் நிலவு செவ்வாயின் மீது மோதி சுக்கு நூறாக உடைந்து விடுமாம். அடக்கொடுமையே...!

இன்னொரு பக்கம் டீமோஸ் நிலவு அழுக்கான நிலவாம். இதன் மீது அதிக தூசுகளும் அழுக்குகளும் நிறைந்து இருக்கிறது. ஆனால் பார்க்கமட்டும் மென்மையாகதோன்றும்.

டீமோஸ் நிலவு
டீமோஸ் நிலவு

மோதிரங்கள்

இதுவரை செவ்வாய் கிரகத்திற்கு மோதிரங்கள் எதுவும் இல்லை. ஆனால் போபோஸ் செவ்வாயின் மீது மோதி உடையும் போது செவ்வாயை சுற்றி வளையங்கள் அதாவது மோதிரங்கள் தோன்றலாம் என்கின்றனர்.

நிலவு ஒன்று மோதிரமாக மாற உள்ளது. அடடே...!

கட்டமைப்பு

செவ்வாயின் மையப்பகுதியில் (1,500 முதல் 2,100 கிலோமீட்டர்கள்) இரும்பு, நிக்கல் மற்றும் கந்தகத்தால் ஆனது. இதை சுற்றி தடிமனான ஒரு பாறை உறை உள்ளது, அதற்கு மேல் இரும்பு, மெக்னீசியம், அலுமினியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றால் செய்யப்பட்ட மேலோடு உள்ளது. இந்த மேலோடு 6 முதல் 30 மைல்கள் (10 முதல் 50 கிலோமீட்டர்) வரை ஆழமானது. அதாவது செவ்வாயின் மையப்பகுதியில் இருக்கும் இரும்பை யாரும் எடுத்துவிடக்கூடாது என்று இயற்கை இத்தனை பாதுகாப்பை ஏற்படுத்தியது போல தோன்றுகிறது.

ஏ... இயற்கையே பூமிக்கு வந்து பாரு! ஒவ்வொரு வீட்டிலேயும் தோசைகல்லே இரும்புதான்....

மேற்பரப்பு

இந்த சிவப்பு நிற செவ்வாய் கிரகம் உண்மையில் பல வண்ணங்களை கொண்டு இருக்கும். ஒரு பக்கமாக பார்த்தால், பழுப்பு, தங்கம் போன்று காணப்படும். இன்னொரு பக்கம் பார்த்தால் சற்று சிவந்து கருப்பு நிறத்தை பெற்றிருக்கும். ஆனால் ஒட்டு மொத்தமாக பார்த்தால் சிவப்பாய் தெரியும்.

பள்ளத்தாக்குகள்

செவ்வாயில் நிறைய பள்ளத்தாக்குகள் இருந்தாலும் Valles Marineris என்ற பள்ளதாக்கு ஒன்று அங்கு அதிக சிறப்பு பெற்றிருக்கிறது. அது சுமார் 4800 கிலோ மீட்டர் வரை நீண்டு இருக்குமாம்.

எரிமலை:

செவ்வாய் கிரகத்தில் மிகப்பெரிய எரிமலையான ஒலிம்பஸ் மோன்ஸ் உள்ளது. இது பூமியின் எவரெஸ்ட் சிகரத்தை விட மூன்று மடங்கு உயரமானது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

நீராதாரம்

செவ்வாய் கிரகத்தில் பண்டைய நதி பள்ளத்தாக்கு, டெல்டாக்கள் ஏரிப்படுகைகள் பாறைகள் அதில் தாதுக்கள் இருப்பதால், முன்பொரு காலத்தில் இங்கு பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இன்று செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உள்ளது, ஆனால்... அந்த நீரானது, துருவப் பகுதிகளில் - பனி வடிவத்திலும், அதே போல் உப்பு நீராகவும் இருக்கிறது.

வளிமண்டலம்

செவ்வாய் கிரகமானது பெரும்பாலும் கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஜன் மற்றும் ஆர்கான் வாயுக்களால் ஆன மெல்லிய வளிமண்டலத்தைக் கொண்டுள்ளது. நம் கண்களுக்கு, பூமியில் நாம் பார்க்கும் பழக்கமான நீல நிறத்திற்கு பதிலாக இடையில் இருக்கும் தூசியால் வானம் மங்கலாகவும் சிவப்பாகவும் இருக்கும். செவ்வாய் கிரகத்தின் குறைவான வளிமண்டலமத்தால் விண்கற்கள், சிறுகோள்கள் மற்றும் வால்மீன்கள் போன்ற பொருட்களின் தாக்கங்கள் இருக்கும்.

வெப்பநிலை

செவ்வாய் கிரகத்தின் வெப்பநிலை 70 டிகிரி ஃபாரன்ஹீட் (20 டிகிரி செல்சியஸ்) அல்லது குறைந்தபட்சம் -225 டிகிரி பாரன்ஹீட் (-153 டிகிரி செல்சியஸ்) வரை இருக்கலாம். வளிமண்டலம் மிகவும் மெல்லியதாக இருப்பதால், சூரியனில் இருந்து வெப்பம் இந்த கிரகத்திலிருந்து எளிதில் வெளியேறுகிறது. நீங்கள் நண்பகலில் செவ்வாயின் பூமத்திய ரேகையில் நின்றால், உங்கள் காலடி சூடாகவும், ( 24 டிகிரி செல்சியஸ்) உங்கள் தலை குளிராகவும் (32 டிகிரி ஃபாரன்ஹீட் அல்லது 0 டிகிரி செல்சியஸ்) போன்ற உணர்வு இருக்கும். அதாவது செவ்வாய் கிரகம் நம் தலையில் ஐஸ் வைத்தது போல இருக்குமாம்.

காந்த மண்டலம்

செவ்வாய் கிரகத்தில் பூமியைப்போன்று காந்தப்புலம் இல்லை, ஆனால் தெற்கு அரைக்கோளத்தில் செவ்வாய் மேலோட்டத்தின் பகுதிகள் அதிக காந்தமாக உள்ளது. இது 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த காந்தப்புலத்தின் தடயங்களைக் குறிக்கிறது.

ஆக... செவ்வாயைப்பற்றி தேவையான தகவல்களை பார்த்துவிட்டோம். இனி அடுத்த வாரம் வேறொரு கிரகத்துடன்...

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com