பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க தொழில்நுட்ப ரீதியிலான மேம்பாடுகளை செய்யபோவதாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஸூகர்பெர்க் தெரிவித்துள்ளார்.
ஃபேஸ்புக் நிறுவனம் தன் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் இந்நிறுவனம் புதிய அப்டேட்களை கொண்டுவரப்போவதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஃபேஸ்புக்கின் எஃப்-8 தொழில்நுட்ப வல்லுநர்கள் கருத்தரங்கில் உரையாற்றும் போது அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஸூகர்பெர்க் சில உறுதிமொழிகளை அறிவித்துள்ளார்.
அதில், “பயனாளர்களின் தகவல்களை காப்பதற்கு முன்னுரிமை அளிப்பதே நிறுவனத்தின் முதல் குறிக்கோள். பயனாளர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் மிக முக்கிய மாற்றங்களை எங்கள் சமூக வலைத்தள செயலிகளில் கொண்டுவர உள்ளோம். அதன்படி மெசேஞ்சர் மூலம் செய்யப்படும் தகவல் பரிமாற்றங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட இரு பயனாளர்களுக்கு மட்டுமே தெரியும் வண்ணம் மேம்படுத்தப்படும்.
மேலும் அவ்வாறான தகவல்களை பேஸ்புக் நிறுவனத்தால் கூட பார்க்க இயலாத வகையில் மேம்படுத்தி, அதனை வாட்ஸ் அப் செயலியுடன் இணைக்கப்படும். இந்தியாவிற்குள் மட்டும் பரிமாறிக் கொள்ளும் வகையில் உள்ள வாட்ஸ் அப் பணப் பரிவர்த்தனை விரைவில் வெளிநாட்டு பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வகையில் மேம்படுத்தப்படவுள்ளது. அதுமட்டுமின்றி இன்ஸ்டாகிராமில் எழுத்து வடிவிலான செய்திகளை போஸ்ட் செய்யவும் சில மேம்பாடுகளை அறிமுகப்படுத்த உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தக் கருத்தரங்கின் போது ஃபேஸ்புக்கின் புதிய மாதிரிகளை மார்க் வெளியிட்டார். இந்தப் புதிய டிசைனில் குரூப் டேப் நடுவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வசதி ஃபேஸ்புக் செயலியில் முதன்முதலாக வெளிவந்துள்ளது. அத்துடன் ஃபேஸ்புக் மெசேஞ்சரின் கணினிக்கான செயலியையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.