செல்போன் பேஸ்புக் செயலியில் மிக விரைவில் டார்க் மோட் வசதி வரப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் சுமார் 200 கோடிக்கும் அதிகமானவர்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளம் பேஸ்புக். பொழுதுபோக்கு என்பதையும் தாண்டி வியாபாரம், தேர்தல் பிரச்சாரம் என வணிக ரீதியிலாகவும் பேஸ்புக் இயங்கி வருகிறது. 2004ம் ஆண்டு தொடங்கப்பட்ட பேஸ்புக், 2008க்கு பிறகு விஸ்வரூபம் எடுத்தது. பயனாளர்களின் மனநிலைக்கு ஏற்பவும், பயன்படுத்த எளிதாகவும் அடுத்தடுத்த அப்டேட்ஸ் மூலம் பேஸ்புக் புதுப்பொலிவுடனே இருந்து வருகிறது.
பல அப்டேட்ஸ் வந்தாலும் பேஸ்புக் தனது வடிவத்தில் பெரிய அளவில் மாற்றங்களைக் கொண்டு வரவில்லை. இந்நிலையில் 'டார்க் மோட்' வசதியை செல்போன் ஆப்களுக்கு விரைவில் பேஸ்புக் அறிமுகம் செய்யவுள்ளது. தற்போது கணினியில் பயன்படுத்தும் பேஸ்புக்கிற்கு டார்க் மோட் வசதி உள்ளது. அதேபோல் செல்போன் செயலியிலும் டார்க் மோட் மிக விரைவில் வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வாட்ஸ் அப், இன்ஸ்டா ஆகியவற்றில் ஏற்கெனவே டார்க் மோட் வசதி அறிமுகமாகியுள்ள நிலையில் பேஸ்புக்கிற்கும் டார்க் மோட் எப்போது வரும் எனப் பயனாளர்கள் எதிர்பார்த்துக் காத்துள்ளனர். அதுமட்டுமின்றி பேஸ்புக்கில் பயனாளர்கள் எவ்வளவு நேரம் செலவிடுகிறார்கள் என்பது குறித்து அறிந்துகொள்வதற்கான ஆப்ஷனிலும் அப்டேட்டை கொண்டு வர பேஸ்புக் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும் COVID-19 Tracker என்ற புதிய அப்டேட்டையும் பேஸ்புக் அறிமுகம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது