கடும் மாசு காரணமாக நிலவின் தென்துருவத்தில் லேண்டரை தரையிறக்குவது மிகவும் சிக்கலானது என ஐரோப்பிய விண்வெளி மையம் தெரிவித்துள்ளது.
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தினர். அதில் இருந்து பிரிக்கப்பட்ட லேண்டரை நிலவில் தரையிறங்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சந்திரனில் இருந்து 2.1 கிலோ மீட்டர் அருகே இருந்தபோது லேண்டருடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. விண்வெளியில் இயங்கக்கூடிய சாதனத்துடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்படுவதும், மீண்டும் தொடர்பு கிடைக்கப் பெறுவதும் இயல்பான ஒன்றே.
ஆனால் விண்ணில் இருக்கும் பொருள்கள் சேதமடையாமல் இருந்தால் மட்டுமே அது சாத்தியம். விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் சாய்ந்த நிலையில் கிடப்பதாகவும், சேதமடையவில்லை என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆனால் இஸ்ரோ நிலவிற்கு அனுப்பிய விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை கண்டறிந்து 3 நாள்கள் ஆன நிலையில், லேண்டரை இதுவரை தொடர்பு கொள்ள இயலவில்லை. வரும் 21ஆம் தேதிக்குள் தொடர்பை ஏற்படுத்தத் தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நிலவின் மேற்பரப்பில் இருக்கும் சுற்றுச்சூழல் மிகவும் சிக்கலானது என்றும், அங்கிருக்கும் நுண்ணிய மாசு மற்றும் கதிர்வீச்சு இடையூறாக இருக்கும் என ஐரோப்பிய விண்வெளி மையம் தெரிவித்துள்ளது. நிலவின் தென்துருவத்தில் தென்படும் கடுமையான மாசு, லேண்டரில் ஒட்டிக்கொண்டால் அதை தொடர்பு கொள்வதில் சிக்கல் ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக லேண்டரில் இணைக்கப்பட்டுள்ள சோலார் பேனலின் செயல்திறன் குறையும் என்றும் ஐரோப்பிய விண்வெளி மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் லேண்டருடனான தகவல் தொடர்பை புதுப்பிப்பதில் வெற்றி கிட்டும் என்ற நம்பிக்கையுடன் இஸ்ரோ செயல்பட்டு வருகிறது.