ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாகம் எலான் மஸ்க் கைக்கு மாறியதிலிருந்து டெக் உலகம் சலசலப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சமே இல்லாமல் இருந்து வருகிறது. ப்ளூ டிக் பெற கட்டணம், ஊழியர்களை பணி நீக்கம் செய்வது, விளம்பரதாரர்களை புறக்கணிப்பது என அடுத்தடுத்து பல பரபரப்பான சூழல்களில் பிண்ணியிருக்கிறது ட்விட்டர் நிறுவனம்.
இதுபோதாதென, ஐ ஸ்டோரில் இருந்து ட்விட்டர் செயலியை ஆப்பிள் நிறுவனம் நிரந்தரமாக நீக்கப்போவதாக குறிப்பிட்டு எலான் மஸ்க் போட்ட ட்வீட் பயனர்களை பதற வைத்திருக்கிறது. அதன்படி, ட்விட்டரில் விளம்பரம் செய்வதை ஆப்பிள் நிறுவனம் நிறுத்திவிட்டதாகவும், விரைவில் ஆப்பிளின் ஆப் ஸ்டோரிலிருந்து ட்விட்டர்-ஐ நீக்கப்போகிறார்கள் எனவும் ட்வீட் போட்டு பரபரப்பை கிளப்பினார்.
மேலும், “அமெரிக்காவில் கருத்து சுதந்திரம் இருப்பதை ஆப்பிள் வெறுக்கிறதா?” எனக் குறிப்பிட்டு அதன் சி.இ.ஓ டிம் குக்கையும் டேக் செய்து ட்வீட் இழையும் பதிவிட்டார் மஸ்க். அதில், “மிகப்பெரிய சந்தையாக இருக்கும் ஆப் ஸ்டோரிலிருந்து ட்விட்டரை நீக்கிவிடுவதாக ஆப்பிள் நிறுவனம் மிரட்டுகிறது. ஆனால் இதற்கு என்ன காரணம் என ஆப்பிள் கூறவில்லை.
ஆப்பிள் மற்றும் கூகுள் ஆப் ஸ்டோரிலிருந்து ட்விட்டரை நீக்கினாலும் அதற்கு போட்டியாக சொந்தமாக ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பதிலிருந்து பின்வாங்க மாட்டேன்” என்றெல்லாம் ட்வீட்டியிருந்தார் எலான் மஸ்க். இந்த நிலையில், புதன்கிழமையன்று (நவ.,30) கலிஃபோர்னியாவில் உள்ள ஆப்பிள் நிறுவன தலைமையகத்தில் அதன் CEO டிம் குக்கை நேரில் சந்தித்து பெசியிருக்கிறார் எலான் மஸ்க்.
இது குறித்த எலானின் ட்வீட்டில், ஆப்பிள் தலைமையகத்தில் டிம் குக்கை சந்தித்ததையும் , ஆப்பிள் - ட்விட்டர் இடையேயான பனிப்போர் குறித்தும் குறிப்பிட்டிருக்கிறார். அதில், “நல்ல உரையாடல். மற்றதை காட்டிலும், ட்விட்டர் பற்றிய தவறான புரிதலை தீர்த்துவிட்டோம். அப்படியெல்லாம் ஒருபோதும் செய்யமாட்டோம் என டிம் குக்கும் தெளிவாக கூறிவிட்டார்.” என எலான் தெரிவித்திருக்கிறார்.