80 ஆயிரம் வருடங்களுக்கு பிறகு வானில் தோன்றும் வால் நட்சத்திரம்; 3 நாட்கள் பார்க்கலாம்

2023 ஜனவரி மாதத்தில் சீனாவின் வானியலாளர்கள் தொலைநோக்கியின் உதவியால், விண்வெளியை ஆராய்ந்து கொண்டிருக்கையில் மங்கலாக சிறுகோள் போன்று ஏதோ ஒன்று சூரியனை நோக்கி வருவதைக் கண்டுபிடித்தனர். முதலில் ஒரு சிறுகோள் என்று நினைத்து அதை கண்காணித்து வந்தனர்.
வால் நட்சத்திரம்
வால் நட்சத்திரம்கூகுள்
Published on

வால் நட்சத்திரம், இந்த பெயரைக்கேட்டாலே, கல்கியின் பொன்னியின் செல்வன் ஞாபகத்திற்கு வரும். சந்தேகமே இல்லை. இதேபோன்று வால் நட்சத்திரம் ஒன்று நமது சூரிய குடும்பத்தில் அதுவும் சூரியனுக்கு அருகாமையில் வந்துக்கொண்டு இருக்கிறது. இதைப்பற்றி தெரிந்துகொள்வோம்.

2023 ஜனவரி மாதத்தில் சீனாவின் வானியலாளர்கள் தொலைநோக்கியின் உதவியால், விண்வெளியை ஆராய்ந்து கொண்டிருக்கையில் மங்கலாக சிறுகோள் போன்று ஏதோ ஒன்று சூரியனை நோக்கி வருவதைக் கண்டுபிடித்தனர். முதலில் ஒரு சிறுகோள் என்று நினைத்து அதை கண்காணித்து வந்தனர்.

அதன்பிறகு பிப்ரவரி 23 அன்று தென்னாப்பிரிக்காவில் உள்ள Asteroid Terrestrial impact last alert system (ATLAS) இது சிறுகோள் அல்ல வால்நட்சத்திரம் என்று கூறியது. அதன்பிறகு இந்த வால் நட்சத்திரத்திற்கு ஆராய்ச்சியாளர்கள் Tsuchinshan-ATLAS, என்று பெயரிட்டு இதை கண்காணித்து வந்தனர். தற்போது இந்த தெளிவற்ற நட்சத்திரத்திற்கு மூடுபனி வால் இருப்பதை விஞ்ஞானிகள் உறுதிசெய்துள்ளனர்.

இந்த அபூர்வ வால் நட்சத்திரமானது அதன் சுற்றுப் பாதையை சுற்றி முடிக்க சுமார் 80 ஆயிரம் ஆண்டுகள் எடுத்துக் கொண்டிருக்கிறது. அதாவது 80 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த நம் முன்னோர்கள் இந்த வால் நட்சத்திரத்தை பார்த்து இருக்கின்றனர். அந்த வாய்ப்பு தற்போது நமக்கு கிடைத்து இருக்கிறது. அதனால் இதை பார்பதற்கு மக்கள் ஆர்வமுடன் காத்து இருக்கின்றனர்.

இதை எங்கு பார்க்கலாம், எப்படி பார்க்கலாம் என்றால், நாளை அதாவது செப்டம்பர் 28 முதல் 30 செப்டம்பர் வரை சூரிய உதயத்திற்கு அரை மணி நேரம் முன்னதாக அடி கிழக்கு வானத்தில் இதை பார்க்கமுடியும். ஆனால் வெறும் கண்களால் பார்க்கமுடியாது. தொலைநோக்கியின் உதவியால் பார்க்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

மேலும் அடுத்த மாதம் அதாவது அக்டோபர் மாதம் 3-வது வார தொடக்கத்தில் மீண்டும் இந்த வால் நட்சத்திரத்தை நாம் சற்று தெளிவாக மேற்கு திசையில் பார்க்கலாம் என்று கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

முன்னதாக, இந்த வால் நட்சத்திரத்தை சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் நாசா விண்வெளி வீரர் மேத்யூ டொமினிக் என்பவர் வீடியோ எடுத்து இருக்கிறார். அந்த வீடியோ இதோ ...

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com