கடந்த மூன்று ஆண்டுகளில் பேஸ்புக் போலி கணக்குகள் 3 மடங்கு அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் சுமார் 200 கோடிக்கும் அதிகமானவர்கள் பயன்படுத்தும் சமூக வலைதளம் பேஸ்புக். இந்நிலையில் பேஸ்புக்கில் உள்ள போலி கணக்குகள் குறித்து அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. அதில் கடந்த மூன்று ஆண்டுகளில் போலி கணக்குகள் 25 கோடியாக அதிகரித்துள்ளதாகவும், இது 3 மடங்கு அதிகம் என தெரிவித்துள்ளது.
பேஸ்புக்கை பயன்படுத்துபவர்களின் விவரங்களை மாத அடிப்படையில் கணக்கிட்டபோது தெரிய வந்துள்ளதாக பேஸ்புக் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2018ஆம் ஆண்டில் 4ஆவது காலாண்டில் போலி கணக்குகள் 11 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும், 2015ஆம் ஆண்டில் இது 5 சதவிகிதமாகவே இருந்ததாகவும் பேஸ்புக் தெரிவித்துள்ளது.
அதாவது 2015 டிசம்பர் 31ன் படி மாத அடிப்படையில் பேஸ்புக்கை பயன்படுத்தியவர்கள் 159 கோடி பேர் பயன்படுத்தியதாகவும், ஆனால் 2018 டிசம்பர் 31 கணக்கின்படி 232 கோடி பேர் பேஸ்புக்கை பயன்படுத்துவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக பிலிப்பைன்ஸ், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் போலி கணக்குகள் அதிகரித்து இருப்பதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாள் அடிப்படையில் கணக்கிடும்போதும் பேஸ்புக் பயனாளர்கள் கடந்த 3 ஆண்டுகளில் அதிகரித்து உள்ளனர்/ 2015ல் 140 கோடியாக இருந்த பயனாளர்கள் 2018ம் ஆண்டு 152 கோடியாக அதிகரித்துள்ளது. இது 9 சதவீத உயர்வு என பேஸ்புக் தெரிவித்துள்ளது.