Robo-க்கள் வசமாகப்போகும் வீட்டுவேலைகள் ... இதனால் பெண்களுக்கே அதிக நல்லதாம்! எப்படி?
அடுத்த பத்தாண்டுகளில் 39 சதவிகித வீட்டு வேலைகளை ரோபோக்களே செய்யும் என்று கூறி, ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது சமீபத்திய ஒரு ஆய்வறிக்கை.
ஆரம்பத்தில் அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு மட்டுமே உதவியாக பயன்படுத்தப்பட்டு வந்த ரோபோக்கள், இப்போது மனிதர்கள் பார்க்கும் அனைத்து வேலைகளையும் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ரோபோக்களின் பயன்பாட்டின் வளர்ச்சியென்பது, சமீபகாலமாக அபரிதமாக உள்ளது. அதிலும் வீட்டு வேலைகளைச் செய்யும் ரோபோக்கள் அதிகளவில் சந்தையில் கொண்டு வரப்பட்டிருக்கும் நிலையில், அடுத்த பத்தாண்டுகளில் 39 விழுக்காடு வீட்டு வேலைகளை ரோபோக்களே செய்யும் என்று ஒரு ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
PLOS ONE எனும் அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, 2033ஆம் ஆண்டுக்குள் வழக்கமான வீட்டு வேலைகள் எந்த அளவுக்கு இயந்திரமயமாகும் என்று தெரிவிக்கும்படி செயற்கை நுண்ணறிவு நிபுணர்கள் 65 பேரிடம் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர்கள் அளித்த பதிலில், “2033ஆம் ஆண்டுக்குள் 39 சதவிகித வீட்டு வேலைகளை ரோபோக்களே செய்யும். அதனால் வீட்டு வேலைக்காக மனிதர்கள் செலவிடும் நேரம் சுமார் 60 சதவீதமாக குறையும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி மனிதர்கள் ‘வேலை அல்லது படிப்பிற்கான’ தங்களது நேரத்தில் 43 சதவீத நேரத்தை வீட்டு வேலை செய்வதற்காக ஒதுக்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ரோபோக்களின் வருகையால், அது சீராகலாம்.
இதேபோல பிள்ளைகளுக்கு பாடம் கற்றுக் கொடுப்பது, அவர்களுடன் நேரம் செலவிடுவது, வயதான குடும்ப உறுப்பினரை கவனித்துக் கொள்வது ஆகியவற்றில் 28 சதவீத வேலைகள் மட்டுமே ரோபோக்கள் செய்யும் என்று இந்த ஆய்வு கூறுகிறது. ரோபோக்களால் மனிதர்களின் வேலை பறிபோகுமா என்று ஆய்வாளர்களிடம் கேட்கப்பட்டபோது, வீட்டு வேலைகள் செய்யும் ரோபோ, உதாரணத்துக்கு தரையைச் சுத்தம் செய்யும் ரோபோக்கள் உலகிலேயே மிக அதிகமான எண்ணிக்கையில் உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படுவதாக ஆய்வில் கலந்து கொண்ட நிபுணர்கள் பலரும் சுட்டிக்காட்டினர்.
இன்றைய சூழலில், வீட்டு வேலைகளைப் பெரும்பாலும் வீட்டுப்பெண்களே செய்கின்றனர். பல இடங்களில், இல்லத்தரசிகள் என்ற பெயரில், அவர்கள் வருமானமும் பறிபோகிறது. இதுபோன்ற காரணங்களால் பெண்களின் வருவாய், சேமிப்பு, ஓய்வூதியம் போன்றவை பாதிக்கப்படும் என்று முந்தைய பல ஆய்வுகள் கூறியுள்ளன. அப்படியிருக்க, வீட்டு வேலைகள் இயந்திரமயமானால் பெண்களுக்குக் கூடுதல் நேரம் கிடைக்கும் என்றும் பாலின சமத்துவம் பெருகும் என்றும் அண்மைய ஆய்வை மேற்கொண்ட பிரிட்டிஷ், ஜப்பானிய ஆய்வாளர்கள் நம்புகின்றனர். எனினும், ரோபோவை வாங்க அதிகச் செலவாகும் என்பதால் பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே ஓய்வுநேரம் கிடைக்கும் சூழல் உருவாகலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனனர்.
வீட்டுவேலை செய்வதுடன், வீட்டில் உள்ளவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதையும் கண்காணித்துக் கூறும் ஆற்றல் ரோபோக்களுக்கு உள்ளது. இருப்பினும் அத்தகைய ஆற்றல் பெற்ற ரோபோ வீட்டிலிருந்து நோட்டமிடுவதை அனுமதிக்க மனிதச் சமூகம் இன்னும் தயாராகவில்லை என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர்.