பூமியின் உட்புறம் எதிர்திசையில் சுழல்கிறதா? விஞ்ஞானிகளின் வேறுபட்ட கருத்து; உயிர்களுக்கு ஆபத்தா?

பூமியின் உள் அடுக்குகளின் சுழற்சி வேகமெடுத்துள்ளதாகவும், அதுவும் திசை மாறி பூமி சுற்றுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது உண்மையா? விரிவாக பார்க்கலாம்...
பூமியின் அடுக்குகள்
பூமியின் அடுக்குகள்புதிய தலைமுறை
Published on

ஒரு பக்கம் வளிமண்டலம் மற்றும் வானவியல் என்று ஆராய்ச்சிகள் நடந்து வந்தாலும், மறுபக்கம் பூமியைப் பற்றியும், அதன் தன்மையை பற்றியும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

கோலா சூப்பர் டீப்

பூமியை ஆய்வு செய்வதற்காக ரஷ்யாவில் விஞ்ஞானிகள் கோலா சூப்பர் டீப் என்று பூமியில் ஒரு ஆழமான துளையிட்டு ஆராய்சியை மேற்கொண்டனர். இதன் ஆழமானது சுமார் 12.26 கிலோமீட்டர் தூரம். இந்த துளைக்கே ஆய்வாளார்களுக்கு 20 ஆண்டுகள் எடுத்துக்கொண்டன. அதன் பிறகு அவர்களால் பூமியை துளையிட முடியவில்லை. காரணம் அதன் உள்ளே செல்ல செல்ல வெப்பமும் அழுத்தமும் அதிகரித்துக்கொண்டே வந்தது. ஆகையால் துளையிடுவதை நிறுத்திக்கொண்டனர்.

கோலா சூப்பர் டீப்
கோலா சூப்பர் டீப்

பூமியின் அடுக்குகள்:

ஆய்வாளர்களின் ஆராய்ச்சிப்படி, "பூமியின் மையப்பகுதியின் வெப்பம், சுமார் 5,000 முதல் 6,000 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம். மேலும், பூமியானது பல அடுக்குகளை கொண்டது. அதாவது,

  • மேலோடு (Crust),

  • மேன்டில் (Mantle),

  • வெளிப்புற கோர் (Outer core),

  • உள் கோர் (Inner core)

என்று பூமி பல பிரிவுகளைக்கொண்டது.

இதில் பூமியின் முக்கியப்பகுதியான உள்கோர் நிக்கல் மற்றும் இரும்பினால் ஆன ஒரு பந்தைப்போல் உள்ளது. பூமியின் மேற்பரப்பு போல பூமியின் உள் அடுக்குகளும் தொடர்ந்து சுற்றிக்கொண்டுதான் இருக்கிறது. இருப்பினும் அதன் சுழற்சியின் வேகம் மற்றும் திசையில்தான் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது” என்கின்றனர்.

தற்பொழுது பூமியின் உள்கோர் தன் சுழற்சியை நிறுத்தி, எதிர் திசையில் சுழலத் தொடங்கியது என்று ஆராய்ச்சியாளார்கள் கூறுகின்றனர். இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. இது குறித்து விஞ்ஞானிகள் சொல்லும் தகவல்கள் என்னென்ன? பார்க்கலாம்...
 முதுநிலை விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன்
முதுநிலை விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன்

பூமியின் உள்கோர் சுழல்வதை நிறுத்திக்கொண்டதா?

மூத்த விஞ்ஞானியான த.வி.வெங்கடேஸ்வரன் கூறுகையில், “பூமியின் அடுக்குகள் வெவ்வேறு வேகத்தில் சுற்றினாலும், அனைத்துமே ஒரே திசையில்தான் சுற்றும். உதாரணத்திற்கு நாம் செல்லும் காரின் வேகத்தை ஒட்டி அருகில் ஒரு கார் அதே வேகத்தில் வரும்பொழுது அது ஓடாதது போலதான் தோன்றும். அதே நேரத்தில் அதன் வேகமானது அதிகரிக்கும் பொழுது, நமது கார் வேகம் குறைவது போன்றும் அதன் வேகம் குறையும் பொழுது, அது ஓடாதது போன்றும் தோன்றும் அல்லவா... அதே ஃபார்முலாதான் இதற்கும். பூமியும் பூமியின் உள் அடுக்குகள் அனைத்தும் ஒரே திசையில், வெவ்வேறு வேகத்தில் சுழல்கிறதால், உள் கோர் எதிர்திசையில் சுற்றுவதை போன்று இருக்கிறது” என்கிறார்.

சீனா ஆய்வாளார்களின் மாறுபட்ட கருத்து!

ஆனால், பூமியின் ஆய்வைக்குறித்து, முன்பே அறிக்கை வெளியிட்டு இருந்த சீனாவின் பீக்கிங் பல்கலைக்கழகத்தின் ஆராய்சியாளர் சியாடோங் சாங் மற்றும் யி யாங் ஆகியோர், பூமியின் உள்கோர் 2009ஆம் ஆண்டு தனது சுழற்சியை நிறுத்திக்கொண்டது என்றார்கள். அதாவது ஒவ்வொரு 35 வருடங்களுக்கு ஒருமுறை பூமியின் உள் அடுக்கு சுழற்சியானது தன் திசையை மாற்றுகிறது என்கின்றனர். அதன்படி இப்பொழுது பூமியின் உள்கோர் எதிர்திசையில் சுற்ற ஆரம்பித்துள்ளதாக கூறுகின்றனர்.

பூமியின் இத்தகைய நிகழ்வுகளால், பூமியின் மேற்புறத்தில் சில மாறுபாடுகள், அதன் அச்சில் சுழல எடுத்துக்கொள்ளும் நேரத்தில் சிறிய மாறுபாடுகள் ஆகியவை ஏற்படலாம் என்கின்றனர் அந்த சீன ஆராய்ச்சியாளர்கள்.

பூமியின் அடுக்குகள்
என்ன பூமியின் உள்மையம் சுழல்வதை நிறுத்தி விட்டதா?! விஞ்ஞானிகள் கண்டுபிடித்த ஆச்சர்ய தகவல்!

ஆதாரம் இல்லை

ஆனால் பூமியின் உள் மையமானது மேற்பரப்பில் வசிப்பவர்கள் மீது பல விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை ஆய்வாளர்கள் குறிப்பிடுவதற்கு இதுவரை எதுவும் ஆதாரம் இல்லை. இருப்பினும், ‘பூமியின் அனைத்து அடுக்குகளுக்கும், உள் மையத்திலிருந்து மேற்பரப்பு வரை உடல்ரீதியான தொடர்புகள் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம்’ என்கின்றனர் சீன ஆராய்ச்சியாளர்கள்.

ஆய்வில் ஈடுபடாத வல்லுநர்கள், விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் குறித்து, தங்களின் வேறு பல கோட்பாடுகளை சுட்டிக்காட்டி, பூமியின் மையத்தில் பல மர்மங்கள் இருப்பதாகவும் எச்சரிக்கின்றனர். இருப்பினும் இதனால் உயிர்களுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்றும் கூறியுள்ளனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com