இந்தியாவில் கடந்த இரண்டு வாரத்தில் ராஷ்மிகா மந்தனா, சச்சின் டெண்டுல்கர் போன்ற முக்கிய நபர்களின் முகங்கள் மாற்றப்பட்டு பொய் வீடியோக்கள் பகிரப்பட்டதாக செய்தி வெளியானது. இந்த இரண்டு விவகாரங்களும் அதிர்ச்சி கொடுத்த நிலையில், முகத்தை மாற்றி மார்பிங் செய்தவர்கள் மீது இந்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது.
இந்நிலையில் தான் DeepFake டெக்னாலஜி மூலம் முகத்தை மாற்றி ஒரு கம்பெனியின் பினான்ஸ் டிப்பார்ட்மெண்டில் இருக்கும் ஊழியர் ஒருவருடன் வீடியோ கால் மூலம் கம்பெனி மீட்டிங் நடத்தியிருக்கும் ஒரு கும்பல் 200 கோடியை திருடியுள்ளது. பணப்பரிவர்த்தனை முடிந்த பிறகு சந்தேகப்பட்ட ஊழியர் கம்பெனி தலைமயகத்துடன் தொடர்புகொண்ட போது, வீடியோ கான்பிரன்ஸில் பேசிய அனைவரும் ஃபேக் நபர்கள் என்றும், DeepFake AI தொழில்நுட்பம் மூலம் முகத்தை மாற்றி பேசியிருக்கிறார்கள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஹாங்காங்கில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனம் அதிநவீன டீப்ஃபேக் மோசடியால் 25 மில்லியன், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 207 கோடியை இழந்துள்ளது. அறிக்கைகளின்படி, மோசடி செய்தவர்கள் ஹாங்காங் கிளையில் நிதிப்பிரிவில் பணியாற்றும் ஒரு ஊழியரை ஏமாற்ற சந்தேகத்திற்கு இடமளிக்காத அதிநவீன டீப்ஃபேக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
சவுத் சைனா மார்னிங் போஸ்ட் (SCMP) மற்றும் பிசினஸ் இன்சைடர் அறிக்கையின்படி, “நிறுவனத்தின் நிதித் துறையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு, அந்நிறுவனத்தின் UK-ஐ தளமாகக் கொண்ட தலைமை நிதி அதிகாரியிடமிருந்து பணப்பரிவர்த்தனை செய்யவேண்டும் என்ற செய்தி வந்துள்ளது. அந்த ஊழியருக்கு சந்தேகம் இருந்த போதும், அதை மேலெழுவதற்கு அனுமதிக்காத போலி நிதி அதிகாரி, உடனடியாக வீடியோ கான்ஃபிரன்ஸுக்கு வருமாறு அழைத்துள்ளார். அந்த வீடியோ கான்பிரன்ஸில் கம்பெனி ஊழியர்களுடன், அந்த தலைமை நிதி அதிகாரியும் தோன்றியுள்ளார்.
அப்போது நடந்த வீடியோ கான்பிரன்ஸில் மோசடி கும்பல் டீப்ஃபேக் டெக்னாலஜி மூலம் முகத்தை மற்றுமல்லாமல், குரலை மாற்றியும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் பேசியுள்ளனர். அந்த இடத்தில் தான் ஊழியர் ஏமாற்றம் அடைந்துள்ளார். ஆனால் அந்த வீடியோ காலில் இருந்த கம்பெனி ஊழியரை தவிர மற்ற அனைவரும் போலி முகத்துடன் பங்கேற்றவர்கள். அந்த வீடியோ காலில் “15 பணப்பரிவர்த்தனைகள் மூலம் 25.6 மில்லியன் (இந்திய மதிப்பில் ரூ.207 கோடி) பணத்தை பரிவர்த்தனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. 15 பரிவர்த்தனைகள் என்பதால் அவருக்கு எந்தவிதமான சந்தேகமும் வரவில்லை, ஒருவேளை ஒரே பரிவர்த்தனையாக இருந்தால் சந்தேகம் எழுந்திருக்கலாம்.
முடிவில் பணப்பரிவர்த்தனை முடிந்த பிறகு சந்தேகத்தில் தலைமையகத்திற்கு தொடர்புகொண்ட ஏமாற்றப்பட்ட ஊழியர், நடந்த வீடியோ கால் கான்பிரன்ஸில் இருந்த அனைவரும் போலியானவர்கள் என்பதை உணர்ந்துள்ளார். மோசடி நடந்த ஒரு வாரம் வரை இந்த மோசடி நடவடிக்கை குறித்த எந்த ஆதாரமும் கண்டறியப்படவில்லை, ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. இது ஹாங்காங்கில் அரங்கேறிய மிகப்பெரிய ஆன்லைன் மோசடியாக அமைந்துள்ளது.
ஹாங்காங் காவல்துறை, குறிப்பிட்ட நிறுவனம் மற்றும் பணியாளர் விவரங்களை வெளியிடுவதைத் தவிர்த்தது. ஆன்லைனில் கிடைத்த வீடியோ மற்றும் ஆடியோக்களை பயன்படுத்தி, மோசடி செய்பவர்கள் இந்த சம்பவத்தை அதிநவீன டீஃபேக் மூலம் ஆழமாக உருவாக்கியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன, ஆனாலும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இது போன்ற தொழில்நுட்ப ரீதியிலான மேம்பட்ட சைபர் கிரைம்களை எதிர்த்துப் போராடுவதில் காவல்துறை எதிர்கொள்ளும் சவால்களை இந்தச்சம்பவம் எடுத்துக்காட்டுகிறது. அதுமட்டுமல்லாமல் டீப்ஃபேக் AI தொழில்நுட்பம் மூலம் ஆரம்ப நிலையில் இருந்த நிதி மோசடி, தற்போது பெருநிறுவனத்தில் ஏமாற்று வேலைகளில் ஈடுபடுமளவு வளர்ந்து வரும் அச்சுறுத்தலை இந்த சம்பவம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. நிதி மோசடிகளுக்கு அப்பால், டீப்ஃபேக் வீடியோக்கள் உலகளாவிய கவலையாக தற்போது மாறிவிட்டன.