கொரோனா பாதிப்பு : மென்பொருள் துறையில் என்ன நடக்கிறது?

கொரோனா பாதிப்பு : மென்பொருள் துறையில் என்ன நடக்கிறது?
கொரோனா பாதிப்பு :   மென்பொருள் துறையில் என்ன நடக்கிறது?
Published on

கொரோனா உலகத்தையே மாற்றிவிட்டது. மென்பொருள் துறையை மட்டும் விட்டுவைக்குமா என்ன? பன்னாட்டு நிறுவனங்களில் வேலையிழப்புகளும் சம்பளக் குறைப்புகளும் எதார்த்தமாகிவிட்டன. மென்பொருள் துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், ஏற்படப்போகும் மாற்றங்கள் பற்றி மென்பொருள் நிபுணர் சேவியரிடம் பேசினோம்.

“இருபதாம் நூற்றாண்டின் அத்தனை தொழில்நுட்ப கர்வங்களையும் தனது கண்ணுக்குத் தெரியாத சுத்தியலால் அடித்து துவம்சம் செய்திருக்கிறது கொரோனா. ஒரு மந்திரக்கோலால் பூமியைத் தொட்டு ஊனமாக்கிய அந்த சர்வதேச சாத்தான் நிறுவனங்களின் வாழ்க்கை முறையையே அடித்துத்துவைத்து புதிதாக்கியிருக்கிறது.

எதுக்கு அலுவலகம்?

ஏறக்குறைய எல்லா நிறுவனங்களும் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை பார்க்க அனுமதித்துள்ளன. கடந்த சில மாதகால அந்த அனுபவம் ‘எதுக்கு அலுவலகம்’ எனும் சிந்தனையை பல கார்ப்பரேட்களின் மனதில் விதைத்திருக்கிறது.  அலுவலகத்துக்கு வராவிட்டால் வேலை செய்யமுடியாது என நம்பிக்கொண்டிருந்த மிக முக்கியமான பணிகள் கூட வீடுகளிலிருந்து இன்றைக்கு நடந்துகொண்டிருக்கின்றன. பணியாளர்களின் பயண நேரமும், பயணக் களைப்பும் தவிர்க்கப்படுவதால் பணிகள் வேகமாகவும் சுறுசுறுப்பாகவும் நடப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.  

பல நிறுவனங்கள் புதிய ஐடியாக்களுடன் களமிறங்கியிருக்கின்றன. அதாவது, நீங்கள் உங்களுடைய சொந்த ஊரிலிருந்தே வேலை செய்யலாம். அதற்கான பிராட்பேண்ட் வசதியை அலுவலகம் செய்துகொடுக்கும். சம்பளம் மட்டும் கொஞ்சம் குறைக்கப்படும். பெரிய சிட்டிகளில் வந்து வீடு பார்த்து, அதிக செலவு செய்து கஷ்டப்பட தேவையில்லை. வேப்பமர நிழலில் ஹாயாகப் படுத்துக்கொண்டே நீங்கள் வேலை செய்யலாம். இதனால் மெட்ரோ சிட்டிகளில் மக்கள் நெருக்கியடித்து கஷ்டப்படும் நிலையும் வராது. கொஞ்சம் காற்றுவரும்.

டிஜிட்டல் வீடியோ, ஆடியோ மென்பொருட்கள் சந்தையில் ஹாட் கேக் ஆகியிருக்கின்றன. பல காலமாக நொண்டியடித்துக்கொண்டிருந்த இத்தகைய மென்பொருட்களெல்லாம் பணம் காய்க்கும் மரமாகிவிட்டது. சில நிறுவனங்கள் தங்களுடைய வளர்ச்சியைப் பல மடங்கு இந்த கோவிட் காலத்தில் உயர்த்தியிருக்கின்றன, காரணம் இத்தகைய மென்பொருட்கள். 

பெண்களுக்கு வாய்ப்பு

கோவிட் கொண்டுவந்திருக்கும் இன்னொரு பாசிட்டிவ் மாற்றம், பெண்களுக்கான வேலைவாய்ப்பு. ‘பிள்ளையைப் பாக்கணும், சமைக்கணும், வீட்டைக் கவனிக்கணும்.. இதுல எங்க ஆபீஸ் போக’ என நினைத்துக்கொண்டிருந்தவர்களும் வேலை செய்யலாம். வீட்டிலிருந்தே குறிப்பிட்ட மணி நேரங்கள் வேலை செய்யலாம் எனும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது. பல கன்சல்டன்சிகள் வேலை வேண்டாம் என இருக்கின்ற திறமையான பெண்களைக் கண்டறிந்து அவர்களுக்கு வேலை வாங்கிக்கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

உடலளவில் ஊனமுற்று வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமல் இருக்கின்ற திறமையான மக்கள்கூட இனிமேல் நிறுவனங்களில் வேலை செய்யமுடியும். அந்த சாத்தியத்தை கோவிட் கொண்டுவந்திருக்கிறது. வீடுகளில் ஓர் இடத்தை அலுவலகமாக மாற்றித்தருகின்ற நிறுவனங்கள் ஏற்கனவே சந்தையில் நுழைந்துவிட்டன. 

மொபைல்  ஆபீஸ்

மொபைல் ஆப்ஸ்கள் இன்னும் வளரும். ஞாபகம் இருக்கா ஒரு காலத்தில் தெருவுக்கு தெரு ‘பிரவுசிங் செண்டர்’ இருக்குமே! அதேபோல வேலை செய்யும் தற்காலிக இடங்கள் எல்லா இடங்களிலும் வரும். வீடுகளிலிருந்து வேலை செய்ய வசதி இல்லாதவர்கள், அல்லது பயணத்தில் இருப்பவர்கள் இத்தகைய இடங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதிவேக இணைய வசதி, ஏசி என இந்த அலுவலகங்கள் அமையும். 

ஒரு அலுவலகத்தில் வேலை பிடித்துவிட்டால் வீட்டிலிருந்தே வேலை செய்பவர்கள் எளிதில் ரிசைன் செய்வதில்லை. அதனால் நிறுவனங்கள் நல்ல திறமைசாலிகளை இழக்கின்ற சூழல் குறையும். புதுப்புது தொழில்நுட்பங்கள் வரும். நிறுவனங்களும் தேவையில்லாமல் வானுயர கண்ணாடி மாளிகைகளைக் கட்டுவதோ, கோடிக்கணக்கில் வாடகை கொடுப்பதோ, லட்சக்கணக்கில் மின் கட்டணம் செலுத்துவதோ தேவைப்படாது. எல்லாமே டிஜிட்டல் வெளியில், டிஜிட்டல் இழையில் நடக்கும். கொலைகார கோவிட் நம்மை குலைநடுங்கவைக்கிறது எனினும், இத்தகைய மாற்றங்கள் நம்மை கொஞ்சம் நிம்மதியடைய வைக்கின்றன” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com