நம்பரை சேமிக்காமலேயே மெசேஜ் அனுப்பும் வசதி, 2ஜிபி வரையிலான கோப்புகளை அனுப்பும் வசதி உள்ளிட்ட பல அப்டேட்டுகளை வெகு விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது வாட்ஸப்!
நம் அன்றாட வாழ்வில் தவிர்க்க இயலாத சமூக வலைதளமாக மாறிவிட்டது வாட்ஸப். பெரும் வளர்ச்சி பெற்ற இந்த ஊடகத்தை மார்க் சக்கர்பெர்க்கின் “மெட்டா” நிறுவனம் வாங்கியது. தொடர்ச்சியாக செயலியை பயனர் வசதிக்காக மேம்படுத்தி வரும் அந்நிறுவனம் தற்போது பல புதிய அப்டேட்டுகளை அறிமுகம் செய்ய உள்ளது.
இனி 2 ஜிபி வரை ஃபைல்களை அனுப்பலாம்!
தற்போது போட்டோ, டாக்குமெண்ட்ஸ் மாதிரியான ஃபைல்களை ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் (Size) இருந்தால் மட்டுமே அனுப்ப முடியும். அதன் காரணமாக வேறு சில செயலிகளை பயன்படுத்தி பயனர்கள் அதிக அளவு கொண்ட ஃபைல்களை அனுப்புவர். இந்நிலையில் இதற்கு தீர்வு காணும் வகையில் 2ஜிபி வரையிலான ஃபைல்களை அனுப்பும் வசதியை அறிமுகம் செய்கிறது வாட்ஸப்.
நம்பரை சேமிக்காமலேயே மெசேஜ் அனுப்பலாம்!
வாட்ஸப்பில் மெசேஜ் செய்ய வேண்டும் என்றால் மொபைல் எண்ணை போனில் பதிவு செய்ய வேண்டும். எண்ணைச் சேமித்து விட்டால் வாட்ஸப் ப்ரொபைல் பிக்சர், ஸ்டேட்டஸ் உள்ளிட்டவை அந்த நபர்களுக்குக் காட்டும். இதனால் பயனர்களின் பிரைவசி பாதிக்கப்படும் அபாயம் இருந்து வந்தது. இதனைத்தொடர்ந்து நம்பரை சேமிக்காமலேயே அவருக்குக் குறுஞ்செய்தி அனுப்பும் வசதியை வாட்ஸப் அறிமுகப்படுத்த இருக்கிறது.
மேலும் சில அப்டேட்டுகள்!
ஹார்ட், சிரிப்பு, கோபம் போன்ற ரியாக்சனை மெசேஜ்களுக்கு வெளிப்படுத்த, ஃபேஸ்புக் மெசேன்ஜர், இன்ஸ்டாகிராமில் இருப்பதை போன்று எமோஜி வசதி அறிமுகமாகிறது.
வாட்ஸப் குரூப்பில் எந்த நபரும் பதிவிடும் தகவலை, அதன் அட்மின் நீக்குவதற்கான வசதி அறிமுகமாகிறது.
வாட்ஸப் குரூப் வாய்ஸ் காலில் 32 பேர் வரை பங்கேற்கும் வசதியும் அறிமுகமாக உள்ளது.
பல வாட்ஸப் குரூப்களை ஒன்றாக கையாளும் வசதியும் (Communities) அறிமுகமாக உள்ளது.
தேவையற்ற வதந்திகள் பரவுவதைத் தடுக்க ஒரே செய்தியை பார்வேர்ட் செய்யும் குழுக்களின் எண்ணிக்கையை ஐந்தில் இருந்து ஒன்றாகக் குறைக்கவும் இருக்கிறது வாட்ஸ்அப்.