விக்ரம் லேண்டரை கண்டுபிடித்து நாசாவுக்கு கூறிய மதுரை இளைஞர்!
மதுரையை சேர்ந்த சண்முக சுப்பிரமணியன் என்ற இளைஞர் விக்ரம் லேண்டரை கண்டுபிடித்து நாசாவுக்கு கூறியுள்ளார்.
சந்திரயான்2 விண்கலம் மூலம் நிலவின் தென் துருவத்தை ஆராய இஸ்ரோ சார்பில் விக்ரம் லேண்டர் அனுப்பப்பட்டது. நிலவில் தரையிரங்க 2 கிலோ மீட்டர் தொலைவே இருந்த நிலையில், லேண்டர் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இதனையடுத்து லேண்டரை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இஸ்ரோவிற்கு, அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா உதவியது. தற்போது விக்ரம் லேண்டரின் பாகங்கள் கண்டுபிடித்து புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. இதற்கு மதுரையைச் சேர்ந்த சண்முக சுப்பிரமணியன் தான் நாசாவுக்கு உதவினார் என்பது தெரியவந்துள்ளது.
மதுரையை சேர்ந்த சண்முக சுப்பிரமணியன் சென்னை தரமணியில் உள்ள லினக்ஸ் கணினி நிறுவனத்தில் இன்ஜினியராக உள்ளார். நிலவில் உள்ள தங்களது செயற்கைக்கோள் எடுத்த புகைப்படங்களை நாசா வெளியிட்டு வந்துள்ளது.
இதையும் பார்க்கலாமே: நிர்மலா சீதாராமனை மரியாதைகுறைவாக பேசிய காங். எம்.பி.க்கு பாஜக கண்டனம்
செப்டம்பர் 17, அக்டோபர் 14, 15, நவம்பர் 1ல் நாசா வெளியிட்ட புகைப்படங்களை ஆய்வு செய்துள்ளார் சுப்பிரமணியன். நாசாவின் புகைப்படங்களை ஆய்வு செய்ததில் விக்ரம் லேண்டரின் பாகங்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளார். தான் கண்டுபிடித்ததை நாசாவுக்கு இமெயில் அனுப்பியுள்ளார். சண்முக சுப்பிரமணியனின் ஆய்வை அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகளும் உறுதி செய்து நன்றி தெரிவித்துள்ளனர்.