சந்திராயன் 3 விண்கலத்தை வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் இறக்கி, இந்தியா சரித்திர சாதனை படைத்தது. தொடர்ந்து அதன் ரோவர் ஆய்வுப் பணிகளிலும் ஈடுபட்டது. இந்த நிலையில் சந்திராயன் 3 திட்டத்தை கெளரவிக்கும் விதமாக, இஸ்ரோவுடன் இணைந்து MyGovIndia தளம் மாபெரும் வினாடி வினா போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. இந்தப் போட்டியில் இந்திய குடிமகன்கள் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் நடைபெறும் இந்தப் போட்டியில் பதிவுசெய்து பொதுமக்கள் தங்களுடைய இடத்தில் இருந்தே கலந்து கொள்ளலாம். இதற்கு MyGovIndia உருவாக்கியிருக்கும் இணையதளத்திற்குச் சென்று, மொபைல் எண், பெயர் மற்றும் வீட்டு முகவரி போன்ற விவரங்களைக் கொடுக்க வேண்டும்.
இந்தப் போட்டியில் மொத்தம் 5 நிமிடங்கள், 10 கேள்விகள். 5 நிமிடங்களில் 10 கேள்விகளுக்குச் சரியான விடையளிப்பவர்களுக்கு, முதல் பரிசாக ரூ.1 லட்சம், இரண்டாவது பரிசாக ரூ.75,000 மற்றும் மூன்றாவது பரிசாக ரூ.50,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முதல் மூன்று இடங்களைத் தவிர்த்து, அடுத்த 100 இடங்களைப் பிடிப்பவர்களுக்கு தலா ரூ.2,000ம், முதல் 100 இடங்களைக் கடந்து அடுத்த 200 இடங்களைப் பிடிப்பவர்களுக்கு ரூ.1000ம் பரிசுத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வினாடி வினா நிகழ்ச்சியில் சந்திரயான் 3 மற்றும் இஸ்ரோவின் நிலவரம் திட்டங்கள் பற்றி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.