காற்றின் சக்தியை இப்படிக்கூட பயன்படுத்தலாமா? சுவாரஸ்ய விஷயங்களை சாத்தியப்படுத்தும் நிறுவனங்கள்!
நாம் சுவாசிக்கும் காற்றிலிருந்தே உலகத்திற்கு தேவையானதை விட அதிகளவு எரிசக்தியை உற்பத்தி செய்ய முடியும். இவ்விஷயத்தில் (காற்றிலிருந்து எரிசக்தியை உற்பத்தி செய்யும் முயற்சியில்) கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், இதில் போடப்பட்ட பெருநிறுவனங்களின் முதலீடுகள் போன்றவற்றிலிருந்து கட்டுரையை தொடங்குவோம்..
காற்றின் வலிமை எப்போதுமே அதிகம்தான். அதில் கீழ்ப்பரப்பில் வீசும் காற்றின் மூலம் மின் ஆலை காற்றாடிகளை சுழல வைக்கலாம். கீழ்ப்பரப்பில் 100 மீட்டர் உயரத்தில் உள்ள காற்றை பயன்படுத்த முடியுமெனும்பட்சத்தில், காற்றாலைகளில் உற்பத்தி செய்வதைவிட அதிகளவு ஆற்றலை நம்மால் மேற்பரப்பு காற்றின் மூலம் உற்பத்தி செய்ய முடியும். காரணம், காற்றானது மேலே செல்ல செல்ல, மேற்பரப்பில் காற்றின் வேகம் என்பது சீராகவும் வலுவாகவும் வீசக்கூடிய ஆற்றல் கொண்டதாக இருக்கும். இந்த ஐடியாலஜியை அடிப்படையாக கொண்டுதான் பல விஞ்ஞானிகளும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் மேற்பரப்பு காற்றின் மூலம் ஆற்றலை தயாரிக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
உதாரணத்துக்கு, துபாயில் அமைந்துள்ள புர்ஜ்கலீபா கட்டடத்தை எடுத்துக்கொள்வோமே... இங்கு, மேலே காற்றாலைகள் வைத்து மின் உற்பத்தி செய்வது முடியாத காரியம். ஏனெனில் இங்கு காற்றின் வேகம் என்பது அதிகம். ஆனால் இதையும் செய்ய யோசனைகள் உள்ளன. இதற்காக பல புதிய ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொறியியலாளர்கள் இலகுரக காற்றாடிகளை தங்களது பட்டறைகளில் உருவாக்கி வருகின்றனர்.
2010ஆம் ஆண்டு அமெரிக்க நிறுவனமான Altaeros, ஹீலியம் பலூனுடன் இணைக்கப்பட்ட மின் இயக்கியை உருவாக்கியது. இந்த மின் இயக்கியின் அமைப்பு மேற்புரம் கனமான அடித்தளத்துடனும், கீழ்ப்புறம் தூண் இல்லாத அடித்தளத்துடன் விசையாளியையும் கொண்டது. 600 மீட்டர் உயரத்தில் இருந்த விசையாளியை, கேபிள் தரையுடன் இணைத்து இந்த மின் இயக்கி அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சோதிக்கப்பட்டது.
அதேசமயம் ஜெர்மன் நிறுவனமான ஸ்கைசேல்ஸ் சரக்குக்கப்பலை இழுப்பதற்காக உயரமான காற்றாடியை உருவாக்கியது. அதனை கண்டுபிடித்தவர்கள், “10 விழுக்காடு டீசலை சேமிப்பதற்காக இது உருவாக்கப்பட்டது” என்றனர். இந்நிலையில் இந்த நிறுவனம் திவாலானது. அதனால் அந்த காற்றாடியோ, அதனை இழுக்கும் விசையாளியோ விற்பனைக்கும் வராமல்போனது.
இந்த 2 சோதனைகளின் மூலமும் மிக உயரத்தில் உள்ள காற்றின் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய, ‘பறக்கும் மின் உற்பத்தி நிலையங்கள்’ தேவை என உறுதிசெய்யப்பட்டது. இவற்றை கருத்தில்கொண்டு 2013 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனம் காற்றில் இயங்கும் காற்றாலைகளை உருவாக்கிய மக்காணி நிறுவனத்தை வாங்கியது.
கூகுளின் அதிக முதலீடு காரணமாக இந்நிறுவனம் முண்ணனி காற்றாலை தொழில்நுட்ப நிறுவனமாக மாறியது. அவர்களின் பறக்கும் மின் நிலையம் ஒரு சிறிய விமானம் அளவிற்கே இருந்தது. இந்த மின் நிலையம், 300 மீட்டர் உயரத்திற்கு சென்று தானியங்கி முறை மூலம் தொடர்ச்சியாக சுழன்று இயங்கும் தன்மை கொண்டதாக இருந்தது.
இந்த ஒரு சாதனம் 300 வீடுகளுக்கு தேவையான மின்சாரத்தை வழங்கியதாக மக்காணி நிறுவனம் தெரிவித்தது. மிகப்பெரிய திருப்பு முனையாகவே இதுபார்க்கப்பட்டு, இந்த காற்றாலை தொடர்பாக ஆவணப்படம் எடுக்கப்பட்டது. ஆனால் இந்நிறுவனம் தோல்வியை தழுவியதால் மீண்டும் பிரச்னை எழுந்தது. இத்தோல்வி குறித்து பேசிய ரிஷி கேஷ் ஜோஷி (ஏரோஸ் ஸ்பேஸ் இன்ஜினியரிங் ஆராய்ச்சியாளர்), “இந்த நிறுவனமானது கடலில் மேற்கொண்ட சோதனையினால் விபத்துக்குள்ளானது” என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட், “பொருளாதார ரீதியாக இயக்கப்படும் இந்த விமானங்கள் லாபமாக இருக்காது என்று தெரிகிறது” என தனது சந்தேகத்தை பதிவிட்டது. இதன் பிறகு 2020 ஆம் ஆண்டு இந்த திட்டத்தினை கைவிட முடிவு செய்யப்பட்டது. இது குறித்து மீண்டும் பேசிய பேராசிரியர் ரிஷி கேஷ், “அதிர்ச்சியளிக்கும் முடிவு இது. வணிக ரீதியாக தனி தன்மையை அடையும் வரை கூகுள் ஆதரிக்கும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். இந்த விஷயத்தில் கிடைத்த நன்மை என்னவென்றால் மக்காணி நிறுவனத்திடமிருந்து கூகுள் இந்த தொழில்நுட்பத்தை பற்றிய எல்லா தகவல்களையும் திறந்த வெளியில் கொடுத்துள்ளது” என்றார்.
இந்நிறுவனத்தின் வீழ்ச்சி அதிர்ச்சிகரமானதாக பார்க்கப்பட்டபோதிலும், இது வான்வெளி காற்றாலைகள் மீதன ஆய்வுகளின் முடிவாக இல்லை. ஏனெனில் இந்நிறுவனத்தை அடிப்படையாக வைத்துதான் சிறிய சிறிய நிறுவனங்கள் கூட தங்களது முயற்சியை துவங்கின. ஒரு சில நிறுவனங்கள் மக்காணியின் அனுகுமுறையை அப்படியே பின்பற்ற ஆரம்பித்தன. இன்னும் சில நிறுவனங்கள், தங்களது ட்ரோனை கயிறு மூலம் மின்இயக்கியுடன் இயக்கி ஆற்றலை உருவாக்கினர்.
மற்றும் சிலர் ட்ரோன்களுக்கு பதிலாக காற்றாடியை பயன்படுத்த ஆரம்பித்தனர். இதில் காற்றடிக்கும் திசைக்கு ஏற்றவாறு காற்றாடியின் ஒருமுனையை தானியங்கியானது இயக்கும். பறக்கும் காற்றாடியின் மற்றொருமுனை மின்இயக்கியோடு இணைக்கப்படும். இக்காற்றாடிகள் தொடர்ந்து வட்டமடித்து கயிற்றை இழுப்பதன் மூலம் ஆற்றலை உருவாக்கும். இதை சாத்தியப்படுத்தியுள்ளது ஸ்கைசேல்ஸ் என்ற நிறுவனம் (திவாலானதாக சொல்லப்பட்டது).
இதுபற்றி அந்நிறுவனம் கூறுகையில், “இவை பாரம்பரிய காற்றாலைகளைவிட 90 சதவீதத்திற்கும் குறைவான பொருள்களை பயன்படுத்தி 500 வீடுகளுக்கு தேவையான மின்சாரத்தை தயாரிக்க உதவும்” என்றது.
நாம் பாரம்பரியமாக பயன்படுத்தக்கூடிய காற்றாலை விசிறிகளைகாட்டிலும் இவை மிகவும் மலிவானவை. மேலும் இவை பெரிதாக எந்தப்பிரச்னையையும் ஏற்படுத்தாதவை. ஆனால் அதிகளவு மின்சாரத்தை இதன் மூலம் பெற வேண்டும் என்றால் அதிக காற்றாடிகளையும் , காற்றாலைகளையும் நிறுவ வேண்டியுள்ளது. அதற்கு, இதனுடன் வான்வெளி காற்றாலைகள் இணைப்பது என்பது தேவையாகின்றது.
உலகளவில் 140 கோடி மக்களின் வீடுகள் நேரடி மின்சார இணைப்புகள் இல்லாமல் இருக்கின்றது. இவர்களெல்லாம் பெரும்பாலும் மாசு ஏற்படுத்தும் டீசல் ஜெனரேட்டர்களையே பயன்படுத்துகின்றனர். அப்படியான மக்கள் உள்ள இடமான மொரீஷியஸூக்கு, ஸ்கைசேல்ஸ் நிறுவனம் தனது முதல் சாதனத்தை விற்றுள்ளது. அங்கு அவர்கள் கிழக்கு ஆப்பிரிக்காவிற்கான வான்வெளி காற்று ஆற்றல் மையத்தை உள்ளூர் முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து நடத்த திட்டமிட்டுள்ளனர்.
கடலில் மிதக்கும் காற்றாடி மற்றும் காற்று பண்ணைகளை இயக்குவதுதான் ஸ்கைசேல்ஸின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. பல கிராமங்களில் தங்களது காற்றாடிகள் மின்இயக்கிகளையே மிஞ்சிவிடும் என ஸ்கைசேல்ஸ் கூறுகிறது.
ஸ்கைசேல்ஸ் போல வளர்ந்து வரும் நிறுவனங்களினால், இத்துறையே நல்ல எதிர்காலத்தினை கொண்டுள்ளதாக கருதப்படுகிறது. தற்போது இந்த வான்வெளி காற்று தொழில்நுட்பத்திற்கு அதிகளவு முதலீடு தேவைப்படுகின்றது. மேலும் இவை விமான போக்குவரத்துக்கும் இடையூரை ஏற்படுத்துமோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
காற்று சக்தியை மின்சக்தியாக மாற்றும் முறையானது, கேட்க சற்று எளிமையாக தோன்றினாலும் நிதர்சனத்தில் சற்று கடினமான செயல்தான். பார்ப்போம்.. இதன் வருங்காலம் எப்படியிருக்குமென!