புதன் கோளை சுற்றிவந்து புகைப்படம் எடுத்து அனுப்பிய பெபிகொலம்போ விண்கலம்

புதன் கோளை சுற்றிவந்து புகைப்படம் எடுத்து அனுப்பிய பெபிகொலம்போ விண்கலம்
புதன் கோளை சுற்றிவந்து புகைப்படம் எடுத்து அனுப்பிய பெபிகொலம்போ விண்கலம்
Published on

சூரியனுக்கு அருகே உள்ள புதன் கோளுக்கு மிக நெருக்கமாக சென்று படமெடுத்துள்ளது ஒரு விண்கலம். இதன் மூலம் புதன் கோள் குறித்த மர்ம முடிச்சுகள் அவிழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூரிய குடும்பத்தின் சிறிய கோள் புதன். நிலாவைவிட அளவில் சற்று பெரியதாக இருக்கும் புதன் கோள், சூரியனுக்கு மிக அருகே உள்ள கோளும் இதுதான். எனவே பூமியில் உள்ளதை விட புதனில் சூரியன் மூன்று மடங்கு பெரிதாகவும், சூரிய வெளிச்சம் 11 மடங்கு அதிகமாகவும் இருக்கும். இந்த கோள் 88 பூமி நாட்களில் சூரியனை சுற்றி வருகிறது.

சூரியனுக்கு அருகே இருப்பதால் இங்கு பகலில் வெப்பம் 430 டிகிரி செல்சியஸ் என்ற அளவை எட்டும். அதுவே இரவில் மைனஸ் 180 டிகிரி செல்சியஸாக குறையும். எனவே இங்கு உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. எனினும் புதன் கோளின் தோற்றம் குறித்து ஆய்வு செய்ய ஐரோப்பா மற்றும் ஜப்பான் நாட்டு விஞ்ஞானிகள் இணைந்து 2018ஆம் ஆண்டு பெபிகொலம்போ விண்கலத்தை புதனுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விண்கலம் கடந்த வெள்ளிக்கிழமை (நேற்று) அன்று புதனுக்கு மிக அருகில் அதாவது 200 கிலோமீட்டர் தொலைவில் பறந்து, புகைப்படம் எடுத்துள்ளது. மேலும் இதில் உள்ள கருவிகள் பல தரவுகளை சேகரித்துள்ளன. இவற்றை கொண்டு ஆய்வு செய்கையில், புதனின் தோற்றம் மற்றும் மேற்பரப்பு குறித்து பல தகவல்கள் கிடைக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள். மேலும் 5 முறை இதே போல நெருக்கமாக பறந்து புகைப்படம் எடுக்கும் இந்த விண்கலம் வரும் 2025ஆம் ஆண்டு புதனின் சுற்றுவட்டப்பாதையில் நுழைய உள்ளது.

அப்போது விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள இரண்டு கலன்கள் பிரிந்து ஓராண்டுக்கு புதனின் சுற்றுவட்டப்பாதையை சுற்றி வந்து தகவல்கலை சேகரித்து பூமிக்கு அனுப்பி வைக்கும். புதன் கோள் சூரியனுக்கு அருகே இருப்பதால் அதனை நெருங்குவது அத்தனை எளிதல்ல. எனவே அதிகபட்ச வெப்பநிலையை தாங்கும் வகையில் இந்த இரண்டு கலன்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன என சொல்லப்பட்டுள்ளது. புதன் கோளில் ஏற்படும் மாற்றங்களை ஆராய்வதன் மூலம் சூரிய குடும்பம் குறித்த மேலும் பல சுவாரஸ்ய தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com