ஆசஸ் நிறுவனம் தங்களின் புதிய ஸ்மார்ட்போனான ‘6 இஸட்’ மாடலை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.
தைவான் நாட்டை சேர்ந்த ஆசஸ் நிறுவனம் தங்களது புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. ‘6 இஸட்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த போன் வரும் 26ஆம் தேதி முதல் ஃபிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வருகிறது. இரண்டு ரகங்களில் வெளியாகும். அதன்படி முதல் மற்றும் இரண்டாம் ரகம் முறையே 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டது. இதில் முதல் ரகத்தின் விலை ரூ.31,999 ஆகும். இரண்டாம் ரகத்தின் விலை ரூ.39,999 ஆகும்.
கருப்பு மற்றும் நீல நிறங்களில் வெளியிடப்பட்டுள்ள இந்த போன், ஸ்நாப்ட்ராகன் 855 எஸ்ஓசி பிராஸர் கொண்டது. 6.4 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே கொண்டது. இந்த டிஸ்ப்ளே எளிதில் உடையாத வகையில் கொரில்லா கிளாஸ் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
கேமராவை பொறுத்தவரையில், 48 எம்பி (மெகா பிக்ஸல்) பிரைமரி கேமராவும், 13 எம்பி வைட் ஆங்கிள் கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. போனிற்குள் இருந்து வெளியே இழுக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ள இந்த கேமராவை, முன்பக்கம் மற்றும் பின்பக்கம் எனத் திருப்பிக்கொள்ள முடியும். இந்த போனில் 5,000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி உள்ளது.