நிலவில் இரவு தொடங்கியிருப்பதால் சந்திரயான்-2 விண்கலத்தின் லேண்டரை தொடர்பு கொள்ளும் வாய்ப்பு மிக குறைவு என்று அறிவியல் பேராசிரியர் தெரிவித்துள்ளனர்.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் இஸ்ரோ அனுப்பி வைத்த விக்ரம் லேண்டர் கடைசி நேரத்தில் தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்தது. இதனால் மிகுந்த ஏமாற்றமடைந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்வதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வந்தனர். இஸ்ரோவுடன் கைகோர்த்த அமெரிக்காவின் நாசாவும், ஹலோ விக்ரம் என குறுஞ்செய்தி அனுப்பி வைத்து தொடர்பு கொள்ள முயற்சி செய்தது.
எனினும் நாசாவும் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனத் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து இஸ்ரோ தலைவர் சிவனும் விக்ரம் லேண்டரை தொடர்புகொள்ள முடியவில்லை எனத் தெரிவித்தார். அத்துடன் ஆர்பிட்டர் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று முதல் நிலவின் இரவு தொடங்குகிறது. எனவே விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ளும் வாய்ப்பு மிகவும் குறைவு என்று அறிவியல் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இயற்பியல் பேராசிரியர் நிருபம் ராய் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ளார். அதில்,“நிலவில் இன்று முதல் இரவு தொடங்குகிறது. இதனால் அங்கு வெப்பநிலை -180 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும். இந்தச் சூழலில் விக்ரம் லேண்டரிலுள்ள தொழிநுட்ப சாதனங்கள் செயல்படுவது கடினம். அத்துடன் விக்ரம் லேண்டரின் ஆயுட் காலம் 14 நாட்கள் மட்டுமே ஆகும். அதாவது நிலவில் பகல் இருக்கும் 14 நாட்கள் மட்டுமே இது வேலை செய்யும்.
நிலவில் இரவில் அது வேலை செய்யவேண்டும் என்றால் லேண்டரை குளிரிலிருந்து பாதுகாக்க சில உபகரணங்கள் தேவைப்படும். அது விக்ரம் லேண்டரில் பொருத்தப்படவில்லை. ஆகவே விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ளும் வாய்ப்பு மிகவும் குறைவு” எனத் தெரிவித்துள்ளார்.