குரலை வைத்து போனை அன்லாக் செய்யும் வசதியை உடனடியாக நீக்க முடிவு செய்துள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு நாளும் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் டிஜிட்டல் உலகில் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பது மிகப்பெரிய சவாலாகவே உள்ளது. சில போலி இணையதளங்களின் மூலம் பயன்பாட்டாளர்களின் தகவல்கள் ஹேக்கர்களால் திருடப்படுவதும், ஏமாற்றப்படுவதும் தொடர்கதையாக மாறி வருகிறது.
இந்நிலையில் கூகுளின் குரலை வைத்து போனை அன்லாக் செய்யும் வசதியை உடனடியாக நீக்க முடிவு செய்துள்ளது. மோட்டோ Z மற்றும் பிக்சல் XL ஆகிய போன்களில் குரலை வைத்து போனை அன்லாக் செய்யும் முறை 9.27 அப்டேட்டிற்கு பிறகு நிறுத்தப்பட்டது.
இதனையடுத்து மற்ற ஆண்ட்ராய்ட் போன்களிலும் ஓகே கூகுள் என கூறி போனை அன்லாக் செய்யும் வசதியும் நீக்கப்படும் என கூகுள் தெரிவித்துள்ளது. விரைவில் வெளியாகவுள்ள கூகுள் தயாரிப்பான பிக்சல் 3XL போனில் இந்த குரலை வைத்து போனை அன்லாக் செய்யும் வசதி நீக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தனிநபர் தகவல் பாதுகாப்பு குறித்த பல்வேறு அச்சுறுத்தல்கள் எழுந்துள்ள நிலையில், பாதுகாப்பு கருதி இந்த அன்லாக் வசதி நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.