அமெரிக்காவின் விஸ்கான்ஸின் மாகாணத்தில் உள்ள த்ரீ ஸ்கொயர்ஸ் எனும் நிறுவனம் ஊழியர்களின் உடலில் அரிசி அளவிலான சிப் ஒன்றைப் பொருத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஊழியர்களின் கைகளில் பொருத்தப்படும் இந்த எலெக்ட்ரானிக் சிப் மூலம் நிறுவனத்தின் முன் கதவுகளை சாவிகள் உதவியின்றி திறக்கலாம் என்றும், கேன்டீனில் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தாமல் ஸ்நாக்ஸ் உள்ளிட்டவைகளை வாங்கலாம் என்றும் கூறியுள்ளது. இந்த திட்டத்தில் இணைவது கட்டாயமாக்கப்படவில்லை என்று கூறியுள்ள அந்த நிறுவனம், இந்த புதிய திட்டத்தில் இதுவரை 50 ஊழியர்கள் இணைந்துள்ளதாகவும் கூறியுள்ளது.
அதேநேரம் ஊழியர்களின் உடலில் பொருத்தப்படும் சிப்களில் அவர்களைக் கண்காணிக்கும் வகையிலான ஜிபிஎஸ் தொழில்நுட்பம் சேர்க்கப்படவில்லை என்றும், அது நிரந்தரமாக கைகளில் இடம்பெற்றிருக்கப் போவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் விரும்பும் நேரத்தில் அந்த சிப்பை வெளியில் எடுத்துக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் த்ரீ ஸ்கொயர்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. அமெரிக்காவில் ஊழியர்கள் உடலில் சிப் பொருத்தும் இதுபோன்ற திட்டத்தைக் கொண்டு வரும் முதல் நிறுவனம் இதுவே.