தொலைதொடர்பு நிறுவனமான ஏர்டெல் நிறுவனம், சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்கும் பிளாஸ்டிக் சிம்கார்டுகளுக்கு பதிலாக மறுசுழற்சிக்கு ஏற்ற PVC சிம் கார்டுகளை தாங்கள் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது. இதற்காக IDEMIA என்ற டெக்னாலஜி நிறுவனத்துடன் இணைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த மறுசுழற்சி சிம்கார்டுகளின் மூலமாக ஆண்டொன்றுக்கு 165 டன்களுக்கும் அதிகமான புதிய பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்படுவதை தடுக்க முடியும். இதனால் 690 டன்களுக்கு மேல் கார்பன் டை ஆக்ஸைடின் உமிழ்வை தடுக்கவும் முடியும் என்று ஏர்டெல் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ஏர்டெல் நிறுவனத்தின் கூற்றுப்படி, ”இந்த புதுவகை சிம்கார்டுகளின் மூலம் பசுமையான முறையில் வாயுக்களை குறைத்தல், கழிவு பொருட்களை குறைத்தல், மறுசுழற்சி மற்றும் தயாரிப்பு மறுபயன்பாடு போன்றவைகளை பெற முடியும்” என்று தெரியவருகிறது.
இந்த சிம் கார்டுகள் புதிய மற்றும் பழைய பயனர்கள் என அனைவருக்கும் கிடைக்கும் வகையில் அமைய உள்ளது.
2030-2031 ஆண்டில், 2020 -2021 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் ,1 மற்றும் 2 GHG உமிழ்வையும் குறைக்க வேண்டும் என்பதனையும், இதே காலக்கட்டத்தில் 3 GHG உமிழ்வை 42 சதவீதம் குறைக்க வேண்டும் என்பதையும் ஏர்டெல் நிறுவனம் தன் இலக்காக வைத்துள்ளது.
பார்தி ஏர்டெல்லின் (Bharti Airtel) சப்ளை செயின் இயக்குனர் பங்கஜ் மிக்லானி கூறுகையில், “இந்திய டெலிகாம் துறையில் நாங்கள் தலைமை தாங்கிவரும் நிலையில் இப்படியொரு அறிவிப்பினை முதன்முதலாக அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சுற்றுப்புறத்துக்கு நன்மை பயக்கும் இவ்வகை சிம்களுக்கு நிச்சயம் மக்களிடம் வரவேற்பு இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.