ARTIFICIAL INTELLIGENCE... இதுபற்றிய செய்திகள் தற்போது நாளிதழில்களில் இடம்பெறாத நாளில்லை. தாமாக சிந்தித்து செயல்படக்கூடிய இயந்திரம் அல்லது கணினி. இதுதான் நம்மில் பலரும் செயற்கை நுண்ணறிவு பற்றி அறிந்த விஷயம். இந்தியாவில் 2023ஆம் ஆண்டில் செயற்கை நுண்ணறிவு சந்தை சுமார் 50,000 கோடி ரூபாயாக உள்ள நிலையில், வரும் 2028ஆம் ஆண்டில் அது 1,67,000 கோடி ரூபாயாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.
இந்தியாவில் பல்வேறு துறைகளில் 48 சதவிகிதம் அளவிற்கு AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதாக TEAMLEASE DIGITAL என்ற நிறுவனம் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. வரும் ஆண்டில் இந்திய நிறுவனங்களில் 75 விழுக்காடு அளவிற்கு AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் அந்நிறுவனம் கணித்துள்ளது.
2023-24ஆம் நிதியாண்டில் வங்கி, நிதிநிறுவனங்கள், பார்மா, ஹெல்த்கேர், நுகர்பொருள், சில்லறை வணிகம், உற்பத்தி, உட்கட்டமைப்பு, போக்குவரத்து ஆகிய துறைகளில் கடந்த நிதியாண்டில் எந்த அளவிற்கு AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற புள்ளிவிவரங்களையும் TEAMLEASE DIGITAL தெரிவித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு பயன்பாடு அதிகரித்தால் நிறுவனங்களில் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்துவிடுமா? என்ற அச்சம் எல்லோரிடமும் இருக்கத்தான் செய்கிறது.
பலர் செய்யும் வேலையை AI தொழில்நுட்பத்தில் எளிதாக செய்துவிடமுடியும் எனக் கூறப்படுவதுதான் அதற்கு காரணம். AI தொழில்நுட்பம் நிறுவனங்களில் அதிகரிக்கும்பட்சத்தில் அது வேலைவாய்ப்பை பாதிக்குமா? என்ற கேள்வியும் உள்ளது.
எது எப்படியானாலும் படித்துவரும் இளைஞர்களுக்கு பல்வேறு சவால்கள் காத்திருக்கத்தான் செய்கின்றன. காலத்திற்கு ஏற்ப உடை, உணவு பழக்கவழங்களை மாற்றிக்கொள்கிறோம். அதேபோல, நம் வாழ்வாதாரத்தை திறம்பட நடத்த மாறிவரும் தொழில்நுட்பங்களையும் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.