இஸ்ரோ அண்மையில் ஜிஎஸ்எல்வி எஃப் 08 ராக்கெட் மூலம் ஜிசாட் 6 ஏ செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. ஆனால், 48 மணி நேரம் கழித்து புவி வட்டப் பாதையின் அடுத்தக்கட்ட நகர்வுக்கு செயற்கைக்கோள் முயன்றுக் கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டு அறை உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து ஜிசாட் 6ஏ செயற்கைக்கோளை தொடர்புக் கொள்ள இரவுப் பகலாக வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் வரும் 12 ஆம் தேதி இஸ்ரோ தனது வழிக்காட்டி செயற்கைக்கோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1ஐ செயற்கைக்கோளை பிஎஸ்எல்வி சி42 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கென பிரத்யேக நேவிகேஷன் சிஸ்டத்தை உருவாக்குவதற்காக, ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். வரிசை செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது இஸ்ரோ. இதன் வரிசையில் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் 1ஐ செயற்கைக்கோள், 9 ஆவது செயற்கைக்கோளாகும். இந்தச் செயற்கைக்கோள் ஏற்கெனவே விண்ணுக்கு அனுப்பி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் 1ஏ செயற்கைக்கோளின் "ருபிடியிம் ஆட்டோமேட்டிக் கிளாக்" நின்று இரண்டு ஆண்டுகள் ஆகிறது. எனவே, அதற்கான மாற்றுச் செயற்கைக்கோளாக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1ஐ செயற்கைக்கோள் அனுப்பப்படுவுதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.