வாட்ஸ் அப்-பில் இயங்கும் குரூப்களில், அட்மின்களுக்கு தெரியாமல் யாரை வேண்டுமானலும் சேர்க்க முடியும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப்-பில் இயங்கும் குரூப்களில் அட்மின் நினைத்தால் மட்டுமே, புதிய உறுப்பினரைச் சேர்க்க முடியும் அல்லது ப்ளாக் செய்ய முடியும். சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்ட வாட்ஸ் அப் செயலியில், பாதுகாப்பு கருதி குரூப் அட்மின்களுக்கு புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அட்மின் நினைத்தால் மட்டுமே, குறிப்பிட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோவை மற்ற குரூப்களுக்கு பகிர்தல், தேவையற்ற நபர்களை நீக்குதல் போன்ற பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.
இந்நிலையில், தற்போது ஹேக்கிங் முறைகளை பயன்படுத்தி எளிதாக நாம் நினைக்கும் நபர்களை வாட்ஸ் குரூப்பில் சேர்க்க முடியும் என்றும், இந்த செயல்பாட்டை குழுவில் இருப்பவர்களுக்கு தெரியாமல் கூட பார்த்துக் கொள்ளலாம் என்றும் தெரிய வந்துள்ளது. ஜெர்மனியின் 'ரூர்' பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் சுவிட்சர்லாந்தில் நடந்த கருத்தரங்கத்தில் இந்த தகவலை வெளியிட்டு உள்ளனர். வாட்ஸ் அப் குரூப்பில் இருக்கும் ஸேவரை ஹாக் செய்தால் எளிமையாக குரூப்பில் ஊடுருவ முடியும் என்றும் ஆராய்ச்சியில், இதைக் கண்டுப்பிடித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆராய்ச்சி மாணவர்களின் இந்த தகவலுக்கு வாட்ஸ் அப் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், இவ்வாறு இருப்பின் அது விரைவில் சரிசெய்யப்படும் என்றும் அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.