மத்திய அரசின் இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பு (Unique Identification Authority of India) சார்பில், சுமார் 6 லட்சம் ஆதார் எண்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இதுதொடர்பான அறிவிப்பை மத்திய அரசே அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், இந்த அறிவிப்பை நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தெரிவித்திருக்கிறார். கொடூரமான குற்றச்செயல்களில் ஈடுபடும் நோக்கத்தில் போலி ஆதார் எண்கள், ஆதார் அட்டைகள் உபயோகிக்கப்படுவதாகவும், அதனை கருத்தில் கொண்டு யு.ஐ.டி.ஏ.ஐ. இந்த முயற்சியை மேற்கொண்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இன்று நடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது `போலி அடையாள அட்டைகள் உருவாவதை தடுக்க மத்திய அரசு என்ன முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது?’ எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த இணை அமைச்சர், `ஒருவரின் அடையாளத்தை உறுதிசெய்ய, அவர் புகைப்படத்தையும் ஆதார் எண்ணுடன் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்மூலம் இதுவரை சுமார் 5,98,999 ஆதார் எண்கள் போலியானவை என கண்டறியப்பட்டு தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளன.
இதற்கு முன் கைரேகை மற்றும் கண்ணின் கருவிழி ஆகியவையே அடையாளங்களாக இருந்தன. தற்போது அவற்றுடன் முகத்தின் முழு புகைப்படமும் ஒரு அடையாளமாக சேர்க்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் போலியானவை கண்டறியப்படும். பாதுகாப்பு வலுசேர்க்கப்பட்டிருக்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நீங்கள் வைத்திருக்கும் ஆதார் அட்டையை உறுதிசெய்ய சில வழிமுறைகள்:
* யு.ஐ.டி.ஏ.ஐ. அதிகாரபூர்வ இணையதளத்தின்கீழ் வரும் பின்வரும் இணையதளத்துக்கு செல்லுங்கள் - https://resident.uidai.gov.in/offlineaadhaar.
* அதில் `Aadhaar Verify' என்பதை க்ளிக் செய்யவும். நேரடியாக அந்த லிங்க் செல்ல, இங்கே க்ளிக் செய்யவும்.
* உங்கள் 12 இலக்க ஆதார் எண் (அ) 16 இலக்க விர்சுவல் ஐடி-ஐ கொடுக்கவும். தொடர்ந்து OTP கொடுத்து உள்நுழையுங்கள்.
* இந்த நிலையிலேயே உங்களுடைய ஆதார் எண் உண்மையானதா, போலியானதா என்பது பற்றிய விவரங்கள் முழுமையாக ஸ்கிரீனில் தெரிந்துவிடும்.
* ஸ்கிரீனில் தெரியும் ஆதார் எண்ணில் உங்கள் பெயர், மாநிலம், வயது, பாலினம் உள்ளிட்ட விவரங்கள் சரியாக இருந்தாலேவும் உங்களுடைய உண்மையான ஐடி என எடுத்துக்கொள்ளலாம்.