இன்றைய காலத்தில் விஞ்ஞானிகள் பலரும் ஒன்றிணைந்து அனுதினமும் பலகட்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களின் நோக்கமெல்லாம் இந்த பிரபஞ்சத்தை பற்றிய ரகசியங்களை தெரிந்துக்கொள்ள வேண்டும் என்பதும், பூமியைப்போன்று வேற்று கிரகங்கள் இருக்கிறதா, அப்படி இருந்தால் அவை மனிதன் வாழத்தகுதியானதாக இருக்கிறதா என்பதை அறிவதுமே.
அப்படி ஆய்வில் ஈடுபட்ட சில விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியின் பலனாக, தற்போது ஒரு முக்கியமான தகவல் நமக்கு தெரியவந்துள்ளது. யார் அந்த விஞ்ஞானிகள்? அவர்கள் கண்டறிந்த தகவல் என்ன? பார்க்கலாம்...
மெக்கில் பல்கலைக்கழகம் மற்றும் மேற்கத்திய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களான, விக்னேஷ்வரன் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஜிரோயுகி டகோ இஷிகாவா ஆகியோர் இணைந்து, சிவப்பு குள்ள நட்சத்திரத்தை கண்டறிந்துள்ளனர். இதைச் சுற்றியுள்ள கோள்களில், ‘உயிரினங்கள் வாழ தகுதியான மண்டல கிரகம்’ இருக்குமென நம்பப்படுகிறது. அதன்பேரில், அதை தேடும் InfraRed Doppler Subaru Strategic Program (IRD-SSP) என்ற ஆய்வினை அவர்கள் இப்போது மேற்கொண்டுள்ளனர்.
முன்னதாக விஞ்ஞானிகள் Gliese 12 b என்ற கோள்ளைப்பற்றி ஆராய்ச்சி செய்கையில், இந்தக் கிரகம் பூமியைப்போன்று இருப்பதை கண்டுபிடித்து இருக்கிறார்கள். தொடர்ந்து, அவை உயிரினங்கள் வாழத்தகுதியானதா என்பதை ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
நம் பிரபஞ்சத்தில் எண்ணற்ற விண்மீன்கள் இருக்கின்றன என்பதை நாம் அறிவோம். அந்த விண்மீன்களில் இருக்கும் எரிசக்தியின் அளவைக்கொண்டு அதன் நிறங்கள் ஒப்பீடு செய்யப்படுகிறது. இதில் சிவப்பு நிறத்தில் காணப்படும் நட்சத்திரங்களை, விஞ்ஞானிகள் சிவப்பு குள்ளர்கள் என்கிறார்கள்.
பொதுவாக சிவப்பு குள்ள நட்சத்திரங்களை சுற்றி இருக்கும் கோள்கள் உயிரினங்கள் வாழத்தகுதியானவையாக இருக்கக்கூடும் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பு. ஆகவே இப்படிப்பட்ட சிவப்பு குள்ள நட்சத்திரத்தை ஆய்வு செய்வதில் விஞ்ஞானிகள் அதிக ஆர்வம் கொண்டு மேற்கொண்டு வருகின்றனர்.
அப்படியான சிவப்புக் குள்ள நட்சத்திரத்தில் ஒன்று TRAPPIST-1 என்ற நட்சத்திரம். மற்றொன்று Gliese 12 என்ற நட்சத்திரம். இதில் TRAPPIST-1 என்ற நட்சத்திரம் அதிக சுறுசுறுப்பானது, வலுவான உயர் ஆற்றல் கொண்டவை. ஆகவே இதிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு உயிர்களுக்கு ஆபத்தானவை. இந்த நட்சத்திரமே ஆபத்து என்பதால் அதை சுற்றி இருக்கும் கிரகங்களும் பெரும்பாலும் மனித வாழ்க்கைக்கு ஒத்துவராத கோள்களைப்பெற்று இருக்கும். இதை உறுதிசெய்யும் விதமாக TRAPPIST-1 நட்சத்திரத்தை சுற்றி வரும் கோள்களான TRAPPIST-1 b மற்றும் c க்கு கிட்டத்தட்ட வளிமண்டலம் இல்லை என்று கூறுகின்றனர் விஞ்ஞானிகள்.
ஆனால் Gliese 12 என்ற வகை நட்சத்திரம் அப்படி அல்ல. இது கிட்டத்தட்ட சூரியனை போன்று ஒத்து இருப்பதால் இதிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு மிக குறைவானது. ஆகவே... இதைச்சுற்றி வரும் கோள்கள் உயிர்களுக்கு பாதுகாப்பானவையாக இருக்கக்கூடும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
Gliese 12 b என்பது ஒரு சூப்பர் எர்த் எக்ஸோப்ளானெட் ஆகும். இது Gliese 12 நட்சத்திரத்தை சுற்றி வருகிறது. இதன் நிறையானது பூமியைப்போன்று மூன்று பங்கு நிறையைக்கொண்டு இருக்கிறது. மேலும் Gliese 12, தனது சிவப்பு குள்ள நட்சத்திரத்தை சுற்றி முடிக்க வெறும் 12.8 நாட்கள் மட்டுமே எடுத்துக்கொள்கிறது என்கிறார்கள்.
மேலும், பூமியிலிருந்து 100 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இந்த கிரகம் இருப்பதால், விஞ்ஞானிகள் இதை ஆராய்வது சற்று சுலபமானது என்கிறார்கள். இது பூமியைப்போன்று இருப்பதால் "கோல்டிலாக்ஸ் மண்டலம்" என்று சொல்லப்படும் வாழத்தகுதியான தட்ப வெட்பநிலை, வளிமண்டலம் ஆகியவற்றை பெற்று இருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
Gliese 12 நட்சத்திரமானது சூரியனை விட அளவில் சிறியதாக இருப்பதால், Gliese 12 b கோளினுள் இருந்து, Gliese 12 நட்சத்திரத்தை பார்ப்பதற்கு மிகவும் சிறியதாக இருக்கும்... அதாவது நமது வீனஸ் கிரகத்திற்குள் தோன்றும் சூரிய நட்சத்திரத்தை போன்று சிறியதாக இருக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். இவையாவும் தகவல்களாக உள்ள நிலையில், Gliese 12 b கோளின் வளிமண்டலம் மற்றும் நீர் நிலைகளைப்பற்றி விஞ்ஞானிகள் தற்போது மேலும் ஆராய்ந்து வருகிறார்கள்.