நிலவின் தென்துருவத்தில் முதன்முதலில் தரையிறங்கி சாதனை படைத்த நிலையில், அடுத்த அடி எடுத்து பாயத்தயாராகி வருகிறது இந்தியா.. நிலவில் அணுமின்நிலையம் அமைப்பதற்கு ரஷ்யா, சீனா நாடுகளுடன் இந்தியாவும் ஒன்றிணைந்துள்ளது. இதற்கான அவசியம் என்ன? ஈர்ப்பு விசை இல்லாத நிலவின் மேற்பகுதியில் எப்படி கட்டுமானம் கட்டி முடிக்கப்படும்?
பார்க்கலாம்.
நிலவில் மனிதன் தரை இறங்கிய நாள் மனித குலத்திற்கு மகத்துவமான நாள். அதுவரை பூமியிலேயே சுற்றித்திரிந்த ஒரு இனம் முதல்முறையாக அண்டவெளியில் பயணம் செய்து
வேறு துணைக்கோளுக்குச் சென்றது அறிவியல் அதிசயமாக பார்க்கப்பட்டது.
அமெரிக்கா, ரஷ்யா ஐரோப்பிய யூனியன் ஜப்பான், இந்தியா, சீனா என வரிசையாக நிலவின் மீதான தங்களது கனவை விஸ்தரித்துக் கொண்டு வருகின்றன. நிலவின் குறிப்பிடத்தக்க
அனைத்து பகுதிகளிலும் வெவ்வேறு நாடுகள் தரையிறங்கி விட்ட நிலையில் நிலவில் மனித குடியேற்றத்தை நிறுவுவதும் நிலவில் ஒரு விண்வெளி ஆய்வு மையத்தை நிறுவுவதும் அடுத்த திட்டமாக இருக்கிறது.
நிலவில் மனித குடியேற்றத்தை ஏற்படுத்துவதற்கு
மிகவும் அவசியமான ஒன்றாக மின்சாரம் இருக்கிறது. எனவே நிலவில் மின்சார உற்பத்தியை சாத்தியப்படுத்தும் வகையில் நிலவின்மேற்பரப்பில் அணுமின் நிலையத்தை அமைக்கும் பணியில் அமெரிக்கா ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கடந்த 20 ஆண்டுகளாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன.
அரை மெகாவாட் வரை ஆற்றல் திறன் கொண்ட சந்திர அணுமின்
நிலையத்தின் சாத்தியத்தை உருவாக்குவதற்கான முதல் கட்ட
பேச்சுவார்த்தை ரஷ்யாவால் நடத்தப்பட்டு அதில் சீனாவும்
இந்தியாவும் இணைந்துள்ளதாக சாத்திய கூறுள்ள தகவல்கள்
தெரிவிக்கின்றன. நிலவில் மனித குடியேற்றத்தை ஏற்படுத்துவதற்கு மின்சாரம் மிக அவசியம் என்பதனால்
முதல் கட்டமாக அரை மெகாவாட் திறன் கொண்ட அணுமின் நிலைய அமைப்பை நிறுவ வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
நிலவில் அணுமின் நிலையத்தை நிறுவும் ரஷ்யாவின் லட்சியத் திட்டம், இந்தியா, சீனா நாடுகளிடமிருந்து கணிசமான ஆர்வத்தைப் பெற்றுள்ளதாக ரஷ்ய அரசின் அணுசக்தி நிறுவனமான ரோசாடோமின் தலைவரான அலெக்ஸி
லிகாச்சேவ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ், இந்த அணுமின் நிலையத்தை 2036 ஆம் ஆண்டுக்குள் நிலவின் மேற்பரப்பில் நிலைநிறுத்தும்
நோக்கத்துடன், மே 2024 இல் இந்த அணுமின் நிலையத்திற்கான
அடிப்படைப் பணிகளைத் தொடங்கியது.